Pages

Friday, February 22, 2013

பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி - நாளிதழ் செய்தி

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இத்திட்டம் சார்பில், 2009ம் ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக, மானியம் ஒதுக்கப்படுகிறது. 2012-13 ம் ஆண்டிற்காக, மாநிலத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஆய்வக உபகரணங்கள், நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் அடிப்படை தேவைக்காக, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.25 ஆயிரத்திற்கான ஆய்வக உபகரணங்களை, சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருசில தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்குவதற்கு, தலைமையாசிரியர்களை அத்திட்ட அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

அந்த நிறுவனங்களில் வாங்கப்படும் உபகரணங்களின் மதிப்பு ரூ.7 ஆயிரம் கூட இருக்காது. அதற்காக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலைகளை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என, தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

போதிய ஆய்வக வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கும், இந்த உபகரணங்களை வாங்குவதால், அதை பயன்படுத்த முடியாமல், கடந்த ஆண்டுகளில் வாங்கிய உபகரணங்களே, அட்டை பெட்டிகளுக்குள் காட்சி பொருட்களாக முடங்கி கிடக்கும்போது இந்தாண்டும், அதே பொருட்களை வாங்கி, அதற்கான "பில்" லாக ரூ.25 ஆயிரத்தை காசோலையாக அனுப்ப வேண்டியுள்ளதாக, கவலை தெரிவிக்கின்றனர்.

தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளுக்கு என்ன வகை அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று, எங்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு பள்ளியிலும், 3 ஆண்டுகளாக ஒரே மாதிரியான ஆய்வகப் பொருட்களையே வாங்க, திட்ட அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இந்நிலையில், இந்தாண்டும் அதே பொருட்களை, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் மட்டும் வாங்க, வற்புறுத்துகின்றனர். பொருட்கள் தரமானதாக இல்லை என்றால், எங்கள் மீது வீண் பழி போட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, என்றனர்.

அரசே கொள்முதல் செய்யலாம்...: இத்திட்டத்தில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பெயர்களுக்கு மானிய தொகை அனுப்பப்பட்டு, அதன்பின், ஆய்வகப் பொருட்கள், நூல்கள் வாங்கி, அதற்கான செலவை தலைமை ஆசிரியர்களிடமிருந்து காசோலையாக தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இதற்கு பதில், பள்ளிகளுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் விவரங்களை பள்ளிகளிடமிருந்து முன்கூட்டியே அரசு பெற்று, அதற்கான பொருட்களை அரசே கொள்முதல் செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கினால், "இடை கமிஷன்" பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.