Pages

Tuesday, February 26, 2013

கல்வி அதிகாரிகள் மீது தலைமை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - நாளிதழ் செய்தி

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, ஏ.இ.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, திருச்சி நகரத்தில், 39 அரசு உதவிப்பெறும் மற்றும், 26 மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 65 தலைமையாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களை, ஏர்செல் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதாக, தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, சில தலைமையாசிரியர்கள் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை, ஏர்செல் மொபைல் போஸ்ட் பெய்டு சிம்கார்டு வாங்க வேண்டும் என, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

கடந்த ஆட்சியில், ஏர்செல் நிறுவனம் மூலம், ஏ.இ.ஓ., முதல், இயக்குனர் வரை, சி.யூ.ஜி., முறையில் சிம்கார்டு வழங்கப்பட்டது. ஆட்சி மாறிய பின், அதே நிறுவனத்தில், சிம்கார்டு வாங்க சொல்லி வலியுறுத்துவது சந்தேகமாக உள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவின்றி, ஏர்செல் நிறுவனத்தின் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, மாவட்ட அதிகாரிகள், இந்த காரியத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது.

வேண்டுமானால், அரசுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் ரெங்கராஜன் கூறியதாவது: தமிழகத்தில், திருச்சியில் மட்டுமே, தலைமையாசிரியர்கள் ஏர்செல் நிறுவன சிம்கார்டு வாங்க வேண்டும் என, கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஏர்செல் நிறுவனத்தின் சிம்கார்டு வாங்கவேண்டும் என, தமிழக அரசோ, பள்ளிக் கல்வித்துறையோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த தனியார் நிறுவனத்திடம், கமிஷன் பெற்றுக்கொண்டு, சில அதிகாரிகள், அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.

தலைமையாசிரியர்களுக்கு விரோதமான, இச்செயலை, உடனடியாக கைவிடவேண்டும். இதுகுறித்து, கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான, திருச்சி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் கூறுகையில், "திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவின்படியே, தலைமையாசிரியர்களை, ஏர்செல் சிம்கார்டு வாங்கச் சொன்னேன். மற்றபடி, எனக்கும், இந்த விஷயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்றார்.

திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், "ஏ.இ.ஓ.,க்கள் முதல், இயக்குனர் வரை, ஏர்செல் பயன்படுத்துகின்றனர். சி.யூ.ஜி., முறையில், இவர்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏ.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களிடம், கட்டணமின்றி இலவசமாக பேசவே, இந்த சிம்கார்டு வாங்கச் சொன்னேன். இதற்காக, அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விருப்பமுள்ள, தலைமையாசிரியர்கள் வாங்கினால் போதும்; யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என, ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்; மற்றபடி இதில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.