Pages

Thursday, February 21, 2013

ஐதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு

ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் வியாழன் அன்று மாலை 7 மணியளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் உள்ள கோனார்க் திரையரங்கம் மற்றும் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடிப்புகள் நடைபெற்றன.

மாலை 7 மணி ஒரு நிமிடத்தின் போது, முதல் குண்டு வெடித்தது. 7.05-க்கு இரண்டாவது குண்டும், அடுத்த 15-வது நிமிடத்தில் மூன்றாவது குண்டும் வெடித்தது. இவற்றில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்து அங்கும் அவர் ஆய்வு நடத்தினார்.

குண்டுவெடிப்பை அடுத்து, ஆந்திர பிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த தில்சுக் நகரில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இவ்வாறு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளதால், இது பயங்கரவாதிகளின் சதி வேலையாக இருக்கும் என கருதப்படுகிறது.

பிரதமர் கண்டனம்

இதனிடையே, ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை தண்டிக்காமல் விடமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அதிகரிப்பு

ஹைதராபாத் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல், புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.