Pages

Saturday, February 9, 2013

பிளஸ் 2 தேர்வு: பொள்ளாச்சிக்கு புதிதாக 2 மையங்கள் தேர்வு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக இரண்டு தேர்வு மையங்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் தேதி துவங்குகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஏழாயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதுதவிர, தனியாக தேர்வு எழுதவும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டு வரை தேர்வுக்காக, 16 மையங்களும், தனித் தேர்வாளர்களுக்கு மூன்று மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டில், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், என, கல்வித்துறை சார்பில் தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி, கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் வடசித்தூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளை தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு பள்ளிகளிலும், தலா 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, இதுவரை பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வடசித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
படிக்கும் பள்ளியில் இருந்து, தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளி நீண்ட தூரத்தில் இருப்பதால் மாணவர்களும் பல ஆண்டுகளாக தவித்து வந்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கடந்தாண்டு வரை 16 ஆக இருந்த தேர்வு மையம், இந்தாண்டு 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கான மையத்தில், இதுவரை எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மையங்களில், மாணவர்களுக்கான இருக்கை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை சரியான முறையில் உள்ளதா என்பதை தேர்வுக்கு முன்னதாக ஆய்வு செய்யப்படும். வசதிகள் குறைவாக இருந்தால், உடனடியாக அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

1 comment:

  1. முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.