Pages

Wednesday, January 2, 2013

TNPSC மூலமாக 2013–ம் ஆண்டு எந்தெந்த அரசு பணி இடங்களுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப் படும்? என்ற கால அட்டவணை ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள், சார்நிலை பணியாளர்கள், குரூப்–ஏ அதிகாரிகள் போன்றோர் தமிழ்நாடு அரசு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு போட்டித்தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.
போட்டித்தேர்வுகள் குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என்று பல்வேறு நிலைகளில் நடத்தப்படுகிறது. எழுத்தர்களும், தட்டச்சர்களும், கிராம நிர்வாக அதிகாரிகளும் குரூப்–4 தேர்வு மூலமாகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரிகள், நகராட்சி கமிஷனர்கள், சார்–பதிவாளர்கள், உதவி தொழிலாளர் ஆய்வாளர்கள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகள், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரிகள், வருவாய் உதவியாளர்கள் போன்றோர் குரூப்–2 தேர்வு மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வு காலஅட்டவணை

இதேபோன்று, துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. ஊராட்சி உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய உயர் பதவிகள் குரூப்–1 தேர்வு மூலமாகவும் நேரடியாக நிரப்பப்படுகின்றன.எந்த தேர்வுக்கு எப்போது அறிவிப்பு வரும்? எப்போது தேர்வு நடத்தப்படும்? தேர்வு முடிவு எப்போது வரும்? என்பன போன்ற விவரங்கள் முன்கூட்டியே தெரியாது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.நட்ராஜும், செயலாளராக டி.உதயச்சந்திரனும் (தற்போது வேறு பதவியில் உள்ளார்) பொறுப்பேற்ற பின்னர் ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? ஆகிய விவரங்களுடன் வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (ஆனுவல் பிளானர்) வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

ஜனவரி இறுதியில் வெளியீடு

அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடிந்தது. காலவரையுடன் தேர்வு முடிவு தேதி, நேர்முகத்தேர்வு, இறுதி முடிவு ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதால் போட்டித்தேர்வுக்கு படித்து வந்த மாணவ–மாணவிகள் உற்சாகத்தோடும், முழுமூச்சோடும் படிக்கும் நிலை உருவானது.இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருக்கிறது. காலி இடங்கள் பற்றிய பட்டியல் 75 சதவீதம் பெறப்பட்டுவிட்டன. இன்னும் ஒருசில துறைகளில் இருந்து குறிப்பிட்ட சில பதவிகளுக்கான காலி இடங்களின் பட்டியல் வரவேண்டியுள்ளது. அதுவும் கிடைக்கப்பெற்றதும் 2013–ம் ஆண்டுக்கான காலஅட்டவணை இறுதி செய்யப்பட்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

1 comment:

  1. district educational officer ku call for pannuvangala

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.