Pages

Tuesday, January 22, 2013

பள்ளி மாணவர்கள் பதிவு விபரங்கள் தலைமை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

பள்ளி மாணவர்கள் பதிவு விபரங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நேற்று மாலையில் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நெல்லை மாவட்டத்தில் நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர் விபரம் சேகரிப்பது தொடர்பாக படிவங்கள் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது மாணவர் விபரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் வெப்சைட் வசதி இல்லை. வெளி மையங்களில பதிவு செய்ய ஒரு மாணவருக்கு 10 நிமிடமும், 15 ரூபாய் வரையிலும் செலவாகிறது.
தமிழகத்தில் பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது : இதில் மாநில செயலாளர் முருசேன், மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சுடலைமணி, மாவட்ட பொருளாளர் ரமேஷ் மற்றும் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இப்பிரச்னை தொடர்பாக தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் முருகேசன், செயலாளர் வின்சென்ட், துணை செயலாளர் சாம் மாணிக்கராஜ், பொருளாளர் உமா சங்கர் மற்றும் நிர்வாகிகள் கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்தனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் தர்மராஜ் பிராங்களின், பொருளாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
மேலும், கடையம், சேரன்மகாதேவி, வள்ளியூர், களக்காடு ஆகிய சரகங்களில் உடனடியாக பொங்கல் போனஸ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.