Pages

Wednesday, January 16, 2013

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை யில் உடன்பாடு கேரள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

கேரளாவில் அரசு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், முதல்வர் உம்மன்சாண்டியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்தது. இதற்கு அரசு ஊழியர்
சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி,  கடந்த 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் தொடங்கினர். இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. முதல் நாளே 60 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வந்தனர். நாளுக்கு நாள் பணிக்கு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதற்கிடையே, பணிக்கு வந்த ஊழியர்களை பல இடங்களில் போராட்டக்காரர்கள் தாக்கினர். கல்வீச்சு உட்பட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் இரவு முதல்வர் உம்மன்சாண்டி, நிதி அமைச்சர் கே.எம். மாணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று அதிகாலை 2 மணி வரை இது நீடித்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.