Pages

Wednesday, January 23, 2013

பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை: பிப்ரவரியில் சிறப்பு முகாம்

அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டு, மாவட்டத்திற்கு, ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின், மாணவ, மாணவியருக்கு, பொது சுகாதார துறை, பல் பரிசோதனை முகாம் நடத்தியது. அதில், 40 சதவீத மாணவர்களுக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும், மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை, பொது சுகாதார துறை, அடுத்த மாதம் துவக்க உள்ளது.

இதுகுறித்து, இத்துறையின் கல்வி பிரிவு இணை இயக்குனர் வடிவேலன் கூறியதாவது: இனிப்பு பண்டங்களை அதிகளவில் உட்கொள்வது; முறையாக பல் துலக்காதது போன்ற காரணங்களால், சிறுவர்களுக்கு, பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறு தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து, 13 வயது வரை, பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கும். இந்த வயதிற்குள், பல் சம்பந்தமான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், நிரந்தர பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். இதை கருத்தில் கொண்டு, மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பல் பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதில், பல் சொத்தை, பற்குழி, சீரற்ற பற்கள், உடைந்த பற்கள், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட, 16 வகையான, பல் நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், பல் மருத்துவர், உதவி பல் மருத்துவர், செவிலியர் அடங்கிய, 5 பேர் கொண்ட மருத்துவக் குழு சென்று முகாமை நடத்தும்.

பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கி, நான்கு மாதங்கள், முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு வடிவேலன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.