Pages

Saturday, January 26, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழக அரசு மறு ஆணை வெளியிட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பற்றி அரசு மறு ஆணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழக மாநிலத் தலைவர் ஆ. மரியதாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் நியமன ஒப்புதல்களை ரத்து செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 23.8.2010-க்கு பின் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வு பெற்றிருந்தால்தான், பணி அமர்த்த ஏற்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆசிரியர் நியமனங்கள் முறையாக ஏற்பளிக்கப்பட்டு ஊதியம் பெற்று வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆணை 23.8.2010-க்கு முன்பாக வெளியிட்டு இருந்தால் பொருத்தமானதாக இருந்து இருக்கும்.

முன்தேதியில் அமலுக்கு வரும் அந்த ஆணையை மூன்றாண்டுகளுக்குப் பின் அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலம்தாழ்த்தி வெளியிடப்பட்ட அரசு ஆணை ஆசிரியர் நலனுக்கு எதிரானது.

எனவே, இந்த ஆணைக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொருத்தமான காலக்கெடுவுக்குள் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று இருக்கவேண்டும் என்ற மறு ஆணையை அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.