Pages

Tuesday, January 29, 2013

இலவச மடிக்கணினி திருடு போனதாக முறைகேடு: கலெக்டரிடம் புகார்

மானாமதுரை அருகே சின்னகண்ணணூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்காமல், திருடு போனதாக கூறி, பள்ளியில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது இதுகுறித்து கலெக்டர் ராஜாராமனிடம், மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை, மானாமதுரை ஒன்றியம், சின்னகண்ணணூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 2011- 2012ம் கல்வி ஆண்டில், 32 மாணவர்கள், பிளஸ் 2 படித்தனர். இவர்களுக்கு, அரசின் இலவச மடிக்கணினி  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்.,6ம் தேதி, நான்கு மாணவர்களுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குணசேகரன், மடிக்கணினி வழங்குவது போல், போட்டோ எடுத்தனர். பின், அந்த நான்கு பேரிடமும், லேப்-டாப்களை திரும்ப வாங்கியதோடு, படித்த, 32 பேருக்கும் வழங்காமல், பின்பு தருவதாக கூறிவிட்டனர்.

இதை நம்பி மாணவர்கள், வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், 2012 அக்.,7ம் தேதி இரவு, பள்ளியில் வைத்திருந்த அனைத்து, மடிக்கணினிகளும் திருடு போனதாக, பள்ளி சார்பில் மானாமதுரை போலீசில், புகார் செய்யப்பட்டது. போலீசாரும் இதை கண்டுபிடிக்கவில்லை. பள்ளி நிர்வாகமும், மாணவர்களுக்கு, மடிக்கணினி பெற்று தரும் முயற்சியில் இறங்கவில்லை.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள், "பள்ளிக்கு வந்த, மடிக்கணினிகளை உடனே எங்களுக்கு வழங்காமல், காலம் தாழ்த்தினர். இதில் எங்களுக்கு, சந்தேகம் எழுகிறது. உடனே கொடுத்திருந்தால், திருடுபோனதாக அவர்கள் கூற வாய்ப்பிருக்காது. இதில், முறைகேடு நடந்துள்ளது. எங்களுக்கு, அரசின் இலவச, மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, கலெக்டர் ராஜாராமனிடம் புகார் தெரிவித்தனர்.

மாணவர்களிடம் பேசிய கலெக்டர், திருடு போன்றவற்றை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், உங்களுக்கு உரிய, மடிக்கணினி வழங்கப்படும் என, உறுதி அளித்தார். பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மடிக்கணினி உண்மையிலேயே திருடு போனது. இதுதொடர்பாக, வாட்ச்மேன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில், முறைகேட்டிற்கு வாய்ப்பில்லை.

பல மாணவர்கள், கல்வி சான்றுகளை கொண்டு வராததால், கொடுக்க முடியாமல் போனது. இல்லாவிடில் அன்றே கொடுத்திருப்போம். இங்கு மட்டுமில்லை; பாதுகாப்பில்லாத கட்டடத்தால், சின்ன கண்ணணூர், இளையான்குடி போன்ற அரசு பள்ளிகளில், மடிக்கணினி திருடு போயுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.