Pages

Thursday, January 31, 2013

‘‘மாணவியின் தற்கொலைக்கு தலைமை ஆசிரியை காரணமல்ல’’ வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளி மாணவியின் தற்கொலைக்கு தலைமை ஆசிரியைதான் காரணம் என்று கருத முடியாது என்று கூறி அவர் மீதான வழக்கினை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
பள்ளி மாணவி தற்கொலை

கும்பகோணத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வீராத்தநல்லூர் பஞ்சாயத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது பள்ளியில் படித்த சூர்யா என்ற 16 வயது மாணவி, அவரது கைப்பையில் இருந்து ரூ.500 திருடியதாக கருதிய விஜயலட்சுமி அவரை கேவலமாக பேசினாராம்.

அத்துடன் மற்ற மாணவ, மாணவிகள் முன்னிலையில் இதுபோல பணம் திருடும் நீயெல்லாம் செத்துப்போகலாம் என்று திட்டினாராம். இதனால் வேதனை அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுவாமிமலை போலீசார் இ.பி.கோ.305 (சிறுவர், சிறுமிகளின் தற்கொலைக்கு காரணமாக இருத்தல்) பிரிவின் கீழ் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சந்தேகம் உள்ளது

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘மாணவிக்கு மற்ற ஆசிரியர்கள் போலத்தான் நான் அறிவுரை கூறினேன். இதனால் வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும், அதற்கு நான் காரணம் என்பதும் சரியானது அல்ல’’ என்று கூறப்பட்டு இருந்தது.

அந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

உண்மையாகவே அந்த மாணவி பணத்தை திருடினாரா? இல்லையா? அல்லது மாணவி திருடியதாக தலைமை ஆசிரியை நினைத்துக்கொண்டாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. அத்துடன் மற்ற மாணவ, மாணவிகள் முன்பாக திட்டினார் என்பது தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என்ற பிரிவின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றம் தானா என்றும் கேள்வி எழுகிறது.

வழக்கு ரத்து

திருடுவதற்கு பதில் இறந்துபோகலாம் என்று மனுதாரர் கூறி இருந்தாலும் அதை வேண்டுமென்றோ, மனதாரவோ கூறி இருக்க மாட்டார். இதுபோன்ற நேரங்களில் வார்த்தைகளை அனைவரும் கவனமாக பயன்படுத்த வேண்டும். கோபத்தில் ஒரு வார்த்தை வரும்போது, அதனை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

விழுப்புரத்தில் இதே போன்ற ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்கள் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். அவர்கள் சிறப்பாக கல்வி கற்க காரணமாக இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

மாணவ, மாணவிகள் கெடுதலான செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியர்களின் கடமை. நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுப்பதுதான் அவர்களது பணி. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை தவறு செய்ததாக கருத முடியாது. எனவே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.