Pages

Saturday, January 26, 2013

பொறுத்தது போதும்!

இருள் விலக இன்னும் நேரமிருந்தது. ஜனவரி ஏழாம் தேதிக்கும் எட்டாம் தேதிக்கும் இடைப்பட்ட அந்த இரவில், இந்தியாவின் இரஜபுத்திர படைப்பிரிவைச் சேர்ந்த ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்ற இரு இந்திய வீரர்கள், ஜம்முவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள மெந்தார் பிரிவில் நம்
எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். ஏழு பேர் கொண்ட ஒரு குழு, வேலிகளுக்கு அருகே கண்காணித்தபடியே இரவு முழுவதும் உலவிக் கொண்டிருப்பார்கள். எழுவரும் ஒரு சேர நடக்கமாட்டார்கள். இருவர் இருவராக மூன்று அணிகளாகப் பிரிந்து, ஒருவர் கண் பார்வையில் மற்றவர்கள் இருக்கும் வண்ணம் உலவுவார்கள். குழுவின் தலைவர் ஏதேனும் ஓர் அணியுடன் மாறி மாறிச் சேர்ந்துகொள்வார்.

அப்படித்தான் அன்று ஹேம்ராஜும் சுதாகர் சிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். அன்று எதிரில் இருப்பவரைக் கூடப் பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு. அதனால், மற்ற அணியினரின் பார்வையில் இவர்கள் இல்லை. இவர்களாலும் அவர்களைப் பார்க்க முடியவில்லை.

திடீரென வேலியைத் தாண்டி, யாரோ வருவது போன்ற சலசலப்பு. அவர்களைச் சுட இருவரும் துப்பாக்கியைத் தூக்கினார்கள். ஆனால், சீறிக்கொண்டு வந்த குண்டுகள் அவர்களை சாய்த்தன. குண்டுகள் ஊடுருவி, உள்ளே வந்தவர்களிடமிருந்து வரவில்லை. வேலியின் மறுபுறம் மலை மேலிருந்து வந்தன. ஊடுருகிறவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக பாகிஸ்தான் படையினர் மறுபுறத்திலிருந்து தாக்குகிறார்கள் எனப் புரிந்து, குழுவிலிருந்த மற்றவர்களும் எதிர்த்தாக்குதலைத் துவக்கினர். நெடு நேரம் சண்டை நடந்தது. விடிந்தபின் பார்த்தால், ஹேம்ராஜும், சுதாகர் சிங்கும் பிணமாகக் கிடந்தனர். ஹேம்ராஜின் கழுத்தில் ஆழமான காயங்கள் இருந்தன. அவர் கழுத்தை அறுக்க முயற்சி நடந்திருப்பது புலனாகியது. சுதாகர் சிங்கின் தலையைக் காணோம். எதிரிகள் வெட்டி எடுத்துக்கொண்டு போயிருந்தனர்.

எதிரிகள், கறுப்பு உடை அணிந்த பாகிஸ்தான் கமாண்டோ படையினர் என்பது இந்தியப்படை நடத்திய தற்காப்புத் தாக்குதலில் இறந்து கிடந்தவர்களைப் பார்த்தபோது புலனாகியது.

இரு நாடுகளுக்கிடையே இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்தக் கோரக் கொலையை கமாண்டோ படைகளை அனுப்பி, பாகிஸ்தான் ஏன் செய்தது? அதற்கான காரணங்கள், இந்தச் சம்பவம் குறித்து அது நிகழ்த்திய எதிர்வினையில் அம்பலமாகிறது.

ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஒரு குழு அமைத்து, இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்பதை விசாரிக்கலாம் என்பது அதன் எதிர்வினை. காஷ்மீர் பிரச்சினையில் அயல்நாடுகளின் தலையீட்டை கொண்டுவரும் உள்நோக்கத்துடன்தான் பாகிஸ்தான் இதைச் சொல்கிறது என்பது வெளிப்படை. அன்னிய சக்திகள் அங்கே நுழைந்தால், அது இந்தியாவிற்கு நிரந்தரத் தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு இந்தியா ஆற்றக்கூடிய எதிர்வினை கடுமையானதாக அமைய வேண்டும். இனி ஒரு முறை பாகிஸ்தான் எந்த ஓர் இந்தியப் படை வீரனின் கழுத்தையல்ல, கைவிரலைக் கூட வெட்டத் துணியாத வகையில் அந்த நடவடிக்கை அமைய வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அது இந்தியப் படை வீரர்களின் மன உறுதியைப் பாதிக்கும். அது நாட்டிற்கு நல்லதல்ல. நம் எல்லைப் பாதுகாப்பிற்கும் ஏற்றதல்ல.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பாதிக்கும். உள்நாட்டில் இன்னும் பல இடங்களில் குண்டு வெடிக்கும். இன்னொரு போர் மூண்டால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்றெல்லாம் வேதாந்தம் பேசிக் கொண்டிராமல், நம் சீற்றத்தைக் காட்ட வேண்டிய தருணமிது.

இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான், ஆனால், அதன் அர்த்தம் அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் இல்லாத பலவீனமான நாடு என்பதல்ல என்பதைப் பாகிஸ்தானுக்கு உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...
  
COURTSEY : PUTHIYATHALAIMURAI

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.