Pages

Sunday, January 27, 2013

முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தோடு இணையும் இணைப்பு விழா மற்றும் ஒருங்கிணைந்த மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காமராசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார். மாநில பொது செயலாளர் திருஞானம், மாநில செயலாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் தங்கவெற்றிவேந்தன், பொது செயலாளர் செல்வமணி, சட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் ஞானவரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

பள்ளிக்கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தையின் போது ஒத்துக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஆதிதிராவிடர்– கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு பணிமாறுதலுக்கு உரிய அரசாணை பெற்றிட ஆவன செய்யவேண்டும். விடுமுறை நாட்களில் முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி போன்ற பயிற்சிகளை தவிர்க்க ஆவன செய்ய வேண்டும். அரசு பொதுத்தேர்வு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் மாவட்ட தலைநகரங்களிலேயே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.