Pages

Thursday, January 31, 2013

2013ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு

தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, பல்வேறு அரசு துறைகளுக்கு, 18 ஆயிரத்து, 244 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்ந்தெடுத்தது.

இந்த ஆண்டு, 27 அரசு துறைகளில், 35 பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியதாவது:

மருத்துவத் துறையில், உதவி அறுவை மருத்துவர் - 2,800; கால்நடை உதவி அறுவை மருத்துவர் - 921; இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 2,716; வி.ஏ.ஓ., - 1,500 உள்ளிட்ட, 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறையில், 10 ஆண்டுகளுக்கு பின், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இனி, குரூப்- 1 உள்ளிட்ட அனைத்து பிரிவு தேர்வுகளிலும், 50 மதிப்பெண்களுக்கு, திறனறி கேள்விகள் (Aptitude) கேட்கப்படும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளில், பொது அறிவு தாள் சேர்க்கப்பட்டுள்ளது.

குரூப்- 2 பிரிவில், நேர்முகம் மற்றும் நேர்முகம் அல்லாத பணியிடங்களுக்கு, தனித்தனியாக தேர்வு நடத்தப்படும். குரூப் -1 தேர்வு, "மாநில குடிமை பணிகள் தேர்வு&' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குரூப்- 2 பிரிவில் உள்ள, நகராட்சிஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள், குரூப் - 1 பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, குரூப்- 2 தேர்வு முடிவுகள், பிப்., 1ம் தேதி வெளியிடப்படும். 2007ம் ஆண்டு முதல், பல்வேறு காரணங்களுக்காக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 300க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள், உரியவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.