Pages

Monday, January 7, 2013

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்கள் பாடுபட அமைச்சர் அறிவுரை

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,  ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ,  மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையின் தொடக்கக் கல்வி இயக்கம் சார்பில், திருச்சி மண்டலத்துக்குட்பட்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான (ஏ.இ.இ.ஓ.,) ஆய்வுக்கூட்டம், நடந்தது. திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தர்மபரி, கிருஷ்ணகிரி ஆகிய, 10 மாவட்டங்களை சேர்ந்த ஏ.இ.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

பள்ளி சுகாதாரம், மாணவர் எண்ணிக்கை, வருகை, கட்டமைப்பு போன்றவற்றை மதிப்பிட்டு, ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பள்ளிக்கான சுழற்கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கல்வித்துறைக்கு, 16 ஆயிரத்து 452 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மாணவ, மாணவியருக்கு, 14 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஒரே நேரத்தில், 20 ஆயிரத்து, 950 ஆசிரியர்களை பணி நியமனம் செய்து, ஆணை வழங்கினார். தமிழக ஆசிரியர் தேர்வாணையம் துவங்கி, 25 ஆண்டுகளில், ஒரு லட்சத்து, 3,436 பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒரே ஆண்டில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடம் என மொத்தம், 59 ஆயிரம் பணிடங்களை நிரப்பி சாதனை புரிந்துள்ளார்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், எட்டாவது இடத்திலிருந்த கல்வித்துறையை, இந்திய அளவில் முதலிடத்தில் கொண்டு செல்லும் முனைப்போடு, முதல்வர் செயல்படுகிறார். வரும், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காகத் தான் தற்போது ஏ.இ.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. விரைவில், தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தமிழகத்தில், ஒரு கோடியே, 35 லட்சம் மாணவ, மாணவியர் உள்ளனர். அனைவருக்கும், தரமான கல்வி, உபகரணங்கள் சென்றடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.