Pages

Friday, December 28, 2012

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தியது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட, மாநிலத்தின் மற்ற நகரங்களிலும், நாள்தோறும் வாகன விபத்துகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலியாகி வருகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதிகளில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து, விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், கடந்தாண்டு போக்குவரத்து துறை வலியுறுத்தியது.

சமீபத்தில், சென்னை பெருங்குடியில் நடந்த விபத்தில், பள்ளி, கல்லூரியை சேர்ந்த, நான்கு மாணவர்கள் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட், தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. "பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில், போதிய அளவிற்கு, பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கி, பயணம் செய்கின்றனர்" என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், நேற்று முதல் கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தி உள்ளது. இதில், "விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பதை தடுக்க, பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை மாற்றியாக வேண்டும்" என, போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டில்லி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில், காலை, 7:00 மணிக்கே, கல்வி நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்து விடுகின்றன. இதனால், பேருந்துகளில் நெருக்கடி இல்லாமல், மாணவர்கள் பயணிக்க முடிகிறது. இந்த முறையால், விபத்துகளும் நடப்பதில்லை.

இதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தை, விரைவில் மாற்றுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், ஜனவரி முதல் வாரத்தில், மீண்டும், விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.