Pages

Friday, December 7, 2012

பள்ளி விளையாட்டு போட்டி குறித்த தமிழக அரசின் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை அனுமதித்தால், பள்ளி கல்வித்துறை நடத்தும் போட்டிகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களும் பங்கு கொள்ள வாய்ப்பு
தரப்படும்" என்கிற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது. கடந்த, பிப்ரவரி மாதம், பள்ளி கல்வித்துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும் விளையாட்டில் பங்கு கொள்ள அனுமதிக்கும் பட்சத்தில், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அரசு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் போட்டிகளில், பங்கு கொள்ள வாய்ப்பு தரப்படும்" என, கூறப்பட்டு உள்ளது.

இந்த அரசாணையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சிலர், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், அரசாணைக்கு இடைக்காலத் தடைவிதித்தது. தடையை நீக்கக்கோரி, பள்ளி கல்வித்துறை சார்பில், ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதாடினார்.

நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும் போட்டிகளில், ஜிம்னாஸ்டிக்ஸ் இடம் பெறவில்லை; எனவே, மாநில அரசு நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றார். இந்த வாதத்தை, ஏற்க முடியவில்லை.

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி இடம் பெறவில்லை என்றால், அதை சேர்க்கும்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பில், மனுதாரர்கள் முறையிடலாம். எனவே, தடை நீக்கப்படுகிறது. தடை கோரிய மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இருதரப்பினர் ஒப்புதலுடன், இறுதி விசாரணைக்கு, இவ்வழக்கை பட்டியலிடலாம். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.