Pages

Tuesday, December 11, 2012

பள்ளி கட்டடத்தை பாதுகாப்பு படையினர் பயன்படுத்த அனுமதியில்லை: அரசு அதிரடி

நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில், நக்சலைட்டுகளுக்கு எதிராக, அதிரடி வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர், பள்ளிக்கூடங்களை பயன்படுத்த கூடாது; இது தொடர்பாக, மத்திய அரசு,
மாநில அரசுகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.நக்சல் பாதிப்பு, அடிக்கடி கலவரம் நடக்கும் பகுதிகளில் கல்வியின் நிலைமை குறித்து, தேசிய கலந்தாய்வு டில்லியில் நடந்தது.இதற்கு, மத்திய மனித வள அமைச்சகமும், "யுனிசெப்'பும் ஏற்பாடு செய்திருந்தன.இதில், பங்கேற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியதாவது:கலவரம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக நக்சலைட் தொந்தரவு உள்ள மாநிலங்களில், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படையினருக்கு, தங்குவதற்கு பள்ளி கட்டங்களை ஒதுக்கக் கூடாது.

இதனால், நக்சலைட்டுகள் கல்வி நிறுவனங்களை குறி வைக்க கூடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு, மாநில அரசுகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், பாதுகாப்பு படையினருக்கு, பள்ளி கட்டடங்களை ஒதுக்க கூடாது.கனிம வளம் உள்ள மாவட்டங்களில், நக்சலைட் தொந்தரவு உள்ளது. இப்பகுதிகளில் பயன்படுத்துவதற்கு என்று ஒருங்கிணைந்த சமூக பொறுப்பு நிதி உள்ளது. இந்த நிதியின் மூலம், மாணவிகளுக்கு கழிப்பறை கட்டித்தரவும், குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இக் கூட்டத்தில் பங்கேற்ற, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷனின் தலைவர் சாந்தா சின்கா பேசும்போது, ""கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதுகாப்பு படையினர் பள்ளிக் கூடங்களை ஆக்கிரமிப்பதால், ஆசிரியர்களே பள்ளிகளுக்கு போவதில்லை. பொதுவாக பள்ளிக் கூடங்கள் அமைந்துள்ள பகுதி அமைதியான பகுதியாக இருக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பேசிய அமைச்சர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.