Pages

Monday, December 31, 2012

அரசு கல்லூரி துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பு

அரசு கல்லூரிகளில், தூய்மை பணி மேற்கொள்ள, தனியார்களை பயன்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை கல்லூரிகளில், இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

அரசு கல்லூரிகளில், 10 ஆண்டுகளாக, அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படாததால், துப்புரவு செய்ய ஆளில்லாமல், கல்லூரி வளாகங்களில் குப்பைகள் அதிகமாக கிடக்கிறது. காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை, அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள அரசு உத்தரவிட்டது.

மேலும், கல்லூரியின் தேவைக்கேற்ப, துப்புரவு பணியாளர்களை நியமித்து கொள்ளலாம் என அறிவுறுத்தியது. கல்லூரி நிதி, பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து, இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இதனால், கல்லூரி நிதி முழுவதும், பெரும்பாலும் பணியாளர் சம்பளத்திற்கே செலவானது.

பல கல்லூரிகள், புதிதாக யாரையும் நியமிக்காமல், இருக்கும் பணியாளர்களை கொண்டே, துப்புரவு பணிகளை மேற்கொண்டன.சில கல்லூரிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, தினசரி சம்பளம் என்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள், பணிக்கு வர ஆரம்பித்தனர். இதனால், தூய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து "தினமலர்" நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தனியார் மூலம், தூய்மை பணியை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. டெண்டர் மூலமாக, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு, தூய்மை பணியை அரசு கொடுத்துள்ளது. இதற்காக, ஒரு கல்லூரிக்கு, மாதம் ஒன்றுக்கு, 22 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்குகிறது.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள பாரதி, காயிதே மில்லத், நந்தனம், அம்பேத்கர், ராணிமேரி மற்றும் மாநில கல்லூரி, அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றில், துப்புரவு பணிகளை, தனியார் மேற்கொள்ள உள்ளனர்.

வளாகத் தூய்மை, கழிவறை தூய்மை பணி, தோட்டப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள, ஒரு கல்லூரிக்கு, ஐந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகளில் ஏற்கனவே பணியிலிருக்கும், துப்புரவு பணியாளர்களோடு இணைந்து, இவர்கள் பணியை மேற்கொள்வர்.

இத்திட்டத்தில், போதிய பயன் கிடைக்கும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளிலும், தூய்மை பணிகள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர், செந்தமிழ் செல்வி கூறுகையில், "தூய்மை பணிகளை மேற்கொள்ளும், தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன; நிதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள், இத்திட்டம் அமல்படுத்தப்படும்,&'&' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.