Pages

Wednesday, December 19, 2012

டி.ஆர்.பி., அலுவலகத்தில் முதுகலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு வந்து முறையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
டி.இ.டி., தேர்வு, அதைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டதில் இருந்து, பல்வேறு பிரச்னைகளுடன், தினமும், 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து விடுகின்றனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில், ஒருசில சான்றிதழ்களை கொடுக்காததால், இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள், தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்றும், அதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்காதவர்கள் என, பல்வேறு காரணங்களுடன், மனுக்கள் கையுமாக, பட்டதாரிகள் வருகின்றனர்.

இப்படி வருபவர்களை, முறையாக அழைத்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற, டி.ஆர்.பி., மறுப்பதால், அலுவலக வாசலில் திரண்டு, கோஷம் போடுவதும், பட்டதாரிகளின் வாடிக்கையாக இருக்கிறது.

தேனியைச் சேர்ந்த அம்பிகா கூறுகையில், "நான், வேதியியல் பட்டதாரி. தேர்வில், 110 மதிப்பெண்களை பெற்று, தேர்வு பெற்றேன். சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பி.எட்., சான்றிதழை அளிக்கவில்லை.

தாமதமாக கிடைத்த சான்றிதழை, டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்தும், இறுதி தேர்வு பட்டியலில், எனது பெயர் சேர்க்கப்படவில்லை. இதுபற்றிக் கேட்டால், அதிகாரிகள், எந்த பதிலும் அளிப்பதில்லை,&'&' என, புலம்பினார்.

இதேபோல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அரசாணையை, டி.ஆர்.பி., அமல்படுத்தவில்லை என்றும், பலர் குற்றம்சாட்டினர். இந்த ஒதுக்கீட்டின் கீழ், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழ் வழியில் படித்த பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ் வழி படித்து, அதற்கான முன்னுரிமை பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, ஆய்வு செய்து வருகிறோம். பள்ளிக்கல்வி முதல், குறிப்பிட்ட கல்விதகுதி வரை, அனைத்துப் படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

ஆனால், பலர், இடையில், ஏதாவது ஒரு கல்வியை, ஆங்கில வழியில் படித்தவர்களாக இருக்கின்றனர். எனவே, விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்தபின், இந்த ஒதுக்கீட்டின் கீழ் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தனியாக அறிவிப்பு செய்யப்படும்.

பணியிடங்கள் அதிகம் இருப்பதால், தகுதியான விண்ணப்பதாரர்கள், கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.