Pages

Saturday, December 22, 2012

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.
அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை கற்பதற்குரிய சிறப்பை வழங்கி வருகிறது. பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் எனது வாக்குரிமையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக [ ஓட்டு போடுவதற்காக ] மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

இன்று காலை எனது நண்பன் ஜமாலுதீன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாகச் சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்ட எங்களுக்கு அங்கே கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க எங்கேயோ அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி [ Geometry Box ], பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, லேப்டாப் உட்பட தேர்வில் வெற்றிபெறும் மாணக்கர்களுக்கு பரிசுத்தொகை என இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் அரசு செயல்படுத்தி வரும் வாய்ப்பை பெற்றோர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை எங்கேயோ இருக்கும் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றன.

வகுப்பு அறை !?
வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.
உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.