Pages

Thursday, December 13, 2012

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் சான்றிதழ் இன்றி தவிப்பு

தமிழகம் முழுவதும், 8ம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் வெளியாகி, மூன்று மாதங்களாகியும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது, தேர்வு எழுதியவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
"அடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால், சான்றிதழ் தேவை" என, தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும், படிக்கும் வாய்ப்பை தருவதற்காக, ஆண்டுதோறும் நேரடியாக, 8ம் வகுப்பு நேரடி தனித் தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்துகிறது.

ஆண்டுதோறும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில், தேர்வு நடைபெறும்; ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதுவர். ரயில்வே துறையில், "கலாசி" வேலையில் சேர, துப்புரவுப் பணியாளர்கள், பதிவு எழுத்தராகப் பதவி உயர்வு பெற, ஓட்டுனர் உரிமம் பெற என, பல நிலைகளில், எட்டாம் வகுப்பு தேர்வு அவசியம்.

இதற்காகவே, படிக்காமலிருந்த ஆயிரக்கணக்கானோர், எட்டாம் வகுப்பு தனித் தேர்வு எழுதுகின்றனர். நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால், தேர்ச்சி, தோல்வி என, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டியிருக்கும்.

இதை தவிர்க்க, கடந்த ஆண்டு, எட்டாம் வகுப்பு நேரடி தனித் தேர்வை, ரத்து செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், அரசு வழக்கம் போல், எட்டாம் வகுப்பு தனித் தேர்வு நடத்த, உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, கடந்த ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு நேரடித் தேர்வு, கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது; செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, விண்ணப்பிக்க உள்ளவர்கள், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தேர்வு முடிவுகளை கணினியில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க, தேதி அறிவிப்பதற்கு முன்பாக, சான்றிதழ் வழங்கப்படும்" என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.