Pages

Sunday, December 16, 2012

ஆசிரியருக்கு 23 ஆண்டுகளாக பணி வரன்முறை இழுத்தடிப்பு : உயர்நீதிமன்றம் கண்டனம்

செங்கல்பட்டில் உள்ள, குண்டூர் தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக, லலிதா என்பவர், 1987ம் ஆண்டு, நவம்பரில் சேர்ந்தார். ஒப்பந்த அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. இவர், தமிழ் பண்டிட். இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால், தமிழ் பண்டிட்டை நியமிக்க, 1986ம் ஆண்டு, கல்வித் துறை உத்தரவிட்டது.
கல்வியாண்டு இறுதியில், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின், பள்ளி துவங்கும் போது, மீண்டும் நியமிக்கப்பட்டார். 1991ம் ஆண்டு, வடமலை நடுநிலைப் பள்ளிக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். 2010ம் ஆண்டு, செப்டம்பரில், பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 23 ஆண்டுகள் பணியில் இருந்தும், இவரது பணியை வரன்முறை செய்யவில்லை.

ஊக்க ஊதியம், கிரேடு உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பணிவரன் முறைக்கான திட்டம், அரசுக்கு அனுப்பப்பட்டது. அதை, கடந்த ஆண்டு, ஏப்ரலில், அரசு நிராகரித்தது. "பணியில் சேரும் போது, வயது வரம்பில், 9 மாதங்கள் அதிகம் இருந்ததால், பணிவரன்முறை நிராகரிக்கப்படுகிறது" என, காரணம் கூறப்பட்டது.

பள்ளி கல்வித் துறையின் உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், லலிதா, மனுத் தாக்கல் செய்தார். "வயது வரம்பை தளர்த்தி, பென்ஷன் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்" என, மனுவில் கோரப்பட்டது. மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.ரவீந்திரன் ஆஜரானார். நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

கல்வித்துறை, 1989ம் ஆண்டு, ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், "இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பண்டிட்டுகளை, தேவைப்பட்டால், வயது வரம்பை தளர்த்தி, பணிவரன்முறை செய்ய வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது. மனுதாருக்கு, வயது வரம்பில், 9 மாதங்கள் அதிகம் இருப்பதாக கூறி, 23 ஆண்டுகளுக்குப் பின், அவருக்கு பணிவரன்முறை செய்வதை, மறுக்க முடியாது.

பணிப் பலன்கள் எதுவும் இல்லாமல், ஒரு ஆசிரியரை, 23 ஆண்டுகளாக, பணிவரன்முறை செய்யாதது, மிகவும் கொடுமையானது. 23 ஆண்டுகள் பணியாற்றிய பின், எந்தவித பணிப்பலன்கள் இல்லாமல், ஓய்வு பெற்றுள்ளார். பணிவரன்முறை செய்ய மறுத்த, பள்ளி கல்வித் துறையின் உத்தரவு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளது. கல்வித் துறையின் அரசாணைக்கும் முரணாக உள்ளது.

எனவே, பள்ளி கல்வித் துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மனுதாரருக்கு வயது வரம்பை தளர்த்தி, பணியில் நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து, பணிவரன்முறை செய்ய, உத்தரவிடப்படுகிறது. ஊக்க ஊதியம், விடுமுறை நாட்களுக்கான சம்பளம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஓய்வூதியப் பலன்கள் அனைத்தையும், இரண்டு மாதங்களில், பள்ளி கல்வித் துறை வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.