Pages

Wednesday, November 28, 2012

5-ம் வகுப்பு மாணவர் மொழிப் பாடத்தை புரிந்து வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்

5-ம் வகுப்பு மாணவர் தமிழ், ஆங்கில பாடத்தை புரிந்து வாசிக்கவும், வாசித்த கருத்தை தெளிவாக சொல்லவும் தெரிய வேண்டும் என்று வத்திராயிருப்பு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி கூறினார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார
வளமையத்திற்குட்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக, தலா இரு நாட்கள் நடைபெறும் எளிமை படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை பயிற்சியை புதன்கிழமை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:

தொடக்க நிலையில் 5-ம் வகுப்பு முடிக்கும் மாணவர் மொழிப் பாடத்தை புரிந்து வாசிக்க தெரிந்திருப்பதுடன், சுயமாய் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்றவராய் திகழ வேண்டும். எளிய வாழ்க்கைக் கணக்குகளை செய்யக் கூடிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவமனைக்குச் செல்லும் போது அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாத்திரையை மருத்தவர் கொடுப்பது இல்லை. அந்தந்த நோய்க்கு தக்கவாறு மாத்திரை தருகிறார். அதுபோல, வகுப்பில் அனைத்து மாணவருக்கும் மொத்தமாய் பாடம் கற்றுக் கொடுப்பதால் பின் தங்கிய மாணவர்கள் பயனடைய இயலாது. பின்தங்கிய மாணவர்கள் பின்தங்கியே போய்விடுவார்கள். அனைவரும் கற்று சிறந்தவர்களாக உருவாகுவதற்காகவே அரசு செயல்வழிக் கற்றல் முறையை அமல்படுத்தியுள்ளது. முதல் 4 வகுப்புகளுக்கு ஏ.பி.எல். முறையில் தான் கற்றுத்தர வேண்டும். 6 குழுக்களாக உட்கார்ந்துதான் மாணவர்கள் கற்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் அடைவுத் திறனுக்கு ஏற்றவாறு படிக்கலாம். ஆனால் அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட பருவத்தில் முழு அட்டையையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

தற்போது சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் மட்டுமே ஏ.பி.எல். அட்டையில் தரப்பட்டுள்ளது. சின்னங்கள், அட்டைகள் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. சின்னத்தைப் பார்த்த உடனே என்ன செயல்பாடு என்பது தெரியும். சமச்சீர் புத்தகத்தை வாசிப்பு, வீட்டுப் பாட வேலை, வர்ணம் கொடுத்தல், அதில் உள்ள செயல்பாடுகளை செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக அரசு செயல்படுத்தியுள்ள இந்த பாடமுறையில் ஆசிரியர்கள் கற்றுத்தந்து மாணவர்களை நாட்டிற்கு பிரயோஜனம் உள்ள குடிமக்களாக உருவாக்க வேண்டும் என்றார் அவர். பயிற்சியில் 92 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் செயல்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.