தலைமை ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, காலவரையின்றி பள்ளிகளை மூடுவதாக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்தில் புத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. தென் பகுதியில் வன்முறை ஏற்பட்டதில் பல இடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பதற்றம்
அதிகரித்தது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தலைமை ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
ஆசிரியர்களை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. சமுதாயத்தில் அமைதி திரும்பவும், மத நல்லிணக்கம் குறித்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்று தருகின்றனர். அதனால் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பட்டானி ஆசிரியர் சங்க தலைவர் பூன்சச் டோங்சிரிப்லாய் கூறுகையில், தாய்லாந்தில் வன்முறை பரவியுள்ள 3 மாகாணங்களில் 1,302 பள்ளிகள் உள்ளன. பட்டானியில் மட்டும் 332 பள்ளிகள் உள்ளன.
இவை அனைத்தையும் மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம். அரசு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வரை காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் போராட்டத்துக்கு மற்ற மாகாண பள்ளி நிர்வாகங்களும் ஆதரவு அளிக்க கேட்டு கொண்டுள்ளோம் என்றார். தாய்லாந்தில் நராதிவட், யாலா, பட்டானி ஆகிய 3 மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். மற்ற மாகாணங்களில் புத்த மதத்தினர் அதிகம் பேர் உள்ளனர். இருதரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதால் தாய்லாந்து அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் 5,000 பேர் கொல்லப்பட்டனர். அதுபோல் மீண்டும் ஒரு நிலை வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.