Pages

Thursday, October 11, 2012

ஆசிரியர் பணி நியமனத்திற்கு புதிய விதிமுறைகளால் தேர்வர்கள் அதிருப்தி

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
வெயிட்டேஜ் அடிப்படையில், 100 மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. டி.இ.டி., தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 60 மதிப்பெண்களை பெற, தேர்வில், 150க்கு, 135 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம், தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் அமலான பின், டி.இ.டி., தேர்வு முறை அமலுக்கு வந்தது.

கடந்த ஜூலையில் நடந்த இத்தேர்வு, வழக்கத்திற்கு மாறாக, அதிக சிந்திக்கும் திறனையும், அதிலும், ஒரு நொடியில், சரியான விடையை கணிக்கும் திறன் படைத்தவர்களால் மட்டுமே விடை அளிக்கும் வகையிலும் அமைந்து இருந்தது. அதேபோல், தேர்வெழுதிய, 6.5 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

தங்களை சமாதானப்படுத்தி, அடுத்த, டி.இ.டி., தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், டி.இ.டி., தேர்வுக்குப் பின், ஆசிரியரை நியமனம் செய்ய, புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., மற்றும் டி.இ.டி., தேர்வு என, தனித்தனியே மதிப்பெண்கள் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர கல்வித் தகுதிகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40மதிப்பெண்கள் வழங்கப்படும்.

புதிய முறையின்படி, பெரும்பாலான தேர்வர்களுக்கு, 40 மதிப்பெண்கள் சுளையாக கிடைக்கலாம். ஆனால், இது மட்டுமே, வேலையை உறுதி செய்யாது. டி.இ.டி., தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 60 மதிப்பெண்களில், எவ்வளவு மதிப்பெண்களை தேர்வர் பெறுகின்றனரோ, அதைப் பொறுத்தே, ஆசிரியர் வேலை கிடைக்கும். எனவே, டி.இ.டி., தேர்வு மதிப்பெண்களே, வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

டி.இ.டி., தேர்வுக்கு, மொத்தம் 150 மதிப்பெண்கள். இதில், 60 சதவீதம் (90 மதிப்பெண்) பெற்றால், தேர்ச்சி என்ற நிலை இருக்கிறது. கடந்த தேர்வில், இந்த, 60 சதவீத மதிப்பெண்களை பெற்றவர் எண்ணிக்கை வெறும், 2,448 தான். இனி, புதிய வழிமுறையின்படி, டி.இ.டி., தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 மதிப்பெண்களையும், முழுவதுமாக பெற வேண்டுமெனில், 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற வேண்டும். அதன்படி, 150க்கு, 135 மதிப்பெண்கள் பெற்றால்தான், 60க்கு, 60 பெற முடியும். 90 மதிப்பெண்களை பெறவே,சிக்கலைச் சந்தித்த பலருக்கு, 135 மதிப்பெண்களை எடுப்பது சுலபம் அல்ல.

பணி நியமனம் நடக்கும்போது, தேர்வர் மத்தியில் கடுமையான போட்டி ஏற்படும். மொத்தத்தில், ஆசிரியர் வேலை, இனி தகவல் தொடர்புத்துறையில் ஆள் சேர்ப்பு போல தகுதிப் போட்டி அதிகரிக்கும். மதிப்பெண் என்பதை விட, தகுதி என்ற நிலை வரும்போது, அதிக அளவில் வடிகட்டும் நடைமுறைகளும் உருவாகும். அரசு பள்ளிகளில், நிரந்தர பணிகளில் சேரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம், பென்ஷன் மற்றும் அரசு விடுமுறைகள் வசதி மட்டும் அல்ல, பணிப் பளு, பொறுப்பு அதிகரிப்புக்கும் இத்தேர்வு முறை வழிகாட்டி இருக்கிறது என்ற கருத்தும் உள்ளது.

1 comment:

  1. rightly said & it is a most welcome procedure to get good quality & intellectual teachers for the students in the govt schools

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.