Pages

Tuesday, October 9, 2012

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை : தமிழக அரசு

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.
அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.
அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்
(உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).
பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
இடைநிலை ஆசிரியர்களுக்கான
"வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை.............-12
70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
50 முதல் 70 சதவீதம் வரை............- 20
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 42
பட்டதாரி ஆசிரியர்களுக்கான
"வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42

4 comments:

  1. sema comedy sir......

    vaazga AIADMK GOVERNMENT.....

    ReplyDelete
  2. what a tragedy ...? Better the TN Govt avoid recruiting teachers..... This system of selecting process is perfect stupidity...!

    ReplyDelete
  3. ennasir TET (II) pass panni irrukaga 142, 138 136 mark edththu irrukaga ithumudiumannu padchavanga yellarukkum therium. anna ithapaththi kalviyalarlam onnumea sollama sattathittam pottu ennasaivathu.

    ithayellam nenachi pakkumbothu nenju valikkuthaiya.

    nerma , neethi ellam seththupocha.

    ReplyDelete
  4. stupidity to the core. ultimately you are cheating the teacher aspirants to get the govt job. plus two la commerce padichavangalum, science padichavangalum ellarumae B.A. english eduthu english vaathiyar agalam. but plus two la mark difference irukum la. yezhuthu arivithavan iraivan aagum endru nalla noolgal solvathu unmai endraal, pattadharigalin saabam summa vidaathu..... kovil kovilaaga poi thamil naatirku mazhai peiyya kudathunu vaenduvom vaanga.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.