Pages

Friday, October 19, 2012

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் விவரம்.

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று முன்தினம் முதல், மழை பெய்து வருகிறது. இதர மாவட்டங்களிலும், கடந்த 2 நாட்களாக மழை வலுத்துள்ளது.

தொடர்மழை காலங்களில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது பாதுகாப்பானதாக இல்லை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக, மழை காலங்களில், பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவெடுப்பதில், அதிகாரிகள் மத்தியில், பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

இந்த குழப்பத்திற்கு காரணம் குறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் மழை காலங்களில், பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசம் இருந்து வந்தது. கல்வி மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளிடம், மழை நிலவரம் குறித்து, அவர்கள் கேட்டறிந்து, அதற்கேற்ப, உள்ளூர் விடுமுறையை அறிவித்து வந்தனர்.

விடுமுறையை ஈடுகட்ட, மாற்றாக, எப்போது பள்ளிகளை நடத்ததலாம் என்பதை, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப அவர்கள், அறிவித்ததும் உண்டு. கடந்த, தி.மு.க., ஆட்சியில், பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது. பல்வேறு பணிகளுக்கு இடையே, மாவட்ட கலெக்டர்கள் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து, உடனடி முடிவெடுக்க முடியாததால் தான் இத்தகைய குழப்பம் ஏற்படுகிறது.

சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இந்த குழப்பம் தொடர்கிறது. எனவே, முன்பு இருந்தது போல், விடுமுறை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, முதன்மை கல்வி அலுவலர் வசமே ஒப்படைத்தால், நிலைமைக்கேற்ப, அவர் முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.