கல்வி உதவித்தொகை மோசடியில் சஸ்பெண்டான 77 தலைமை ஆசிரியர்கள் விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாக ஆசிரியர்கள் வட்டாரங்கள் தெரிவித்தன. நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை 81 லட்சம் முறைகேடு செய்ததாக 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் 51 பேர் பெண்கள். இந்த முறைகேடுக்கு துணைபோன மாவட்ட ஆதிதிராவிடநல அலுவலர் ராமசந்திரன், கண்காணிப்பாளர் உமாபதி ஆகியோரும் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்டான தலைமை ஆசிரியர்களிடம் 17 (பி) பிரிவின்கீழ் விளக்கம் கேட்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அனைவரும் ஒரே மாதிரி பதில் அளித்திருந்தனர். 2 மாதம் ஆகியும் தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த விசாரணை அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. சஸ்பெண்டான 77 தலைமை ஆசிரியர்கள் பணியாற்றி வந்த பள்ளிகளில் 51 பள்ளிகளில் 2 ஆசிரியரை கொண்டு செயல்பட்டு வந்த பள்ளிகளாகும். தற்போது ஒருவர் மட்டுமே அந்த பள்ளியில் பாடம் நடத்தி வருவதால் ஏழை மாணவ, மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஆசிரியர்களும் அங்கு நியமிக்கப்படவில்லை. ‘டெப்டேசன்Õ அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அந்த பள்ளிகளுக்கு சரியாக வருவதில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல்வி உதவித்தொகையை வாங்கி புரோக்க ருக்கு ரூ.600, குழந்தைக்கு ரூ.1,200ம் கொடுத்த தலைமை ஆசிரியர்களை மட்டும் சஸ்பெண்ட் செய்தது எந்த வகையில் நியாயம் என ஆசிரியர் சங்கங்கள் குரல் எழுப்பின. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர், செயலாளர் என பலரையும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தலைமை ஆசிரியர்களை பணியில் சேர்த்து கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே மோசடிக்கு அரசுத் துறைகளில் நடந்த பாரபட்ச நடவடிக்கை, இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த கல்வி உதவித்தொகை மோசடியை கண்டுபிடிக்க முடியாத நிலை போன்ற பல குழப்பங்களால், சஸ்பெண்ட் ஆசிரியர்களை பணியில் சேர்த்து கொண்டு விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ள தாக கூறப்படுகிறது. அதன் படி, இன்னும் ஒரு வாரத் தில் 77 பேரும் பணிக்கு திரும்புவார்கள் என்று ஆசிரியர் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
* சுகாதார குறைவான தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2009, 2010ம் ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்தனர்.
* ரூ.81 லட்சம் கல்வி உதவித்தொகையாக பெறப்பட்டது. இதில் ரூ.68 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு.பள்ளியில் படிக்கும் அனைவருமே சுகாதார குறைவான தொழில் செய்வோரின் குழந்தைகள் என முறைகேடாக பட்டியல் தயாரித்ததாக குற்றச்சாட்டு.
* காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன், செல்லியாயிபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆர்.சி பேட்டபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், பள்ளபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகியோர் மீது போலீசில் புகார். இவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
* புகாருக்குள்ளான ஆசிரியர் சரவணன் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் முன்ஜாமீன் பெற்றனர்.
* புகாருக்கு ஆளான மற்ற தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.