தமிழ்நாடு முழுவதும் நேற்று 61/2 லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார்கள். 86 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்தியா முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 150 மார்க்குக்கு கேள்வி கேட்கப்பட்டு அதில் 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி என்றும் கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த தேர்வு முதல் முறையாக கடந்த ஜுலை மாதம் நடத்தியபோது தேர்வு எழுத 11/2 மணி நேரம் மட்டுமே கொடுக்கப்பட்டது. கேள்வியும் கடினமாக கேட்கப்பட்டிருந்தது.
இதனால் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். எனவே நேற்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
1,094 மையங்கள்
ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தாமல் நேற்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத தமிழ்நாடு முழுவதும் 1,094 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதும் தேர்வு முதல் தாள் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதும் தேர்வு 2-வது தாள் என்றும் அழைக்கப்படுகிறது.
முதல் தாள் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிக்கு முடிந்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடந்தது.
தேர்வு எழுத பெரும்பாலான பெண்கள் கைக்குழந்தைகளுடனும், கணவருடனும் வந்தனர். திருமணமாகாத பெண்கள் தந்தை அல்லது தாயுடன் வந்திருந்தனர்.
பல பெண்கள் பச்சிளங்குழந்தைகளை கணவரிடம் அல்லது தாயிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதினார்கள்.
61/2 லட்சம் பேர் எழுதினர்
காலையில் நடந்த முதல் தாள் தேர்வுக்கு 3 லட்சத்து 10 ஆயிரத்து 941 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 36 ஆயிரத்து 529 பேர் தேர்வு எழுதவரவில்லை.
சென்னையில் மட்டும் 13 ஆயிரத்து 757 பேர் விண்ணப்பித்ததில் 3 ஆயிரத்து 378 பேர் தேர்வு எழுதவரவில்லை.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாள் தேர்வுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 95 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 49 ஆயிரத்து 300 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மொத்தத்தில் 86 ஆயிரம் பேர் வரவில்லை. 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினார்கள்.
எப்படி இருந்தது?
``இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு எப்படி இருந்தது?'' என்று கேட்டதற்கு, ``தேர்வு எளிதாக இருந்தது. தேர்வு எழுத நேரம் அதிகமாக இருந்தது ஆனால் ஒரு சில கேள்விகள் கடினமாக இருந்தன. ஒரு கேள்வியில் லீப் வருடம் அல்லாதது எது என்று கேட்கப்பட்டிருந்தது. ஆனால் 4 பதிலும் லீப் வருடங்கள்தான் கொடுக்கப்பட்டிருந்தது'' என்று பெரும்பாலான ஆசிரியர்கள் கூறினார்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு குறித்து கூறுகையில், ``தமிழ் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. ஆங்கிலத்தில் உள்ள கேள்விகள் எளிமையாக இருந்தன. மொத்தத்தில் கடினமாகவும் இல்லை, எளிதாகவும் இருக்கவில்லை'' என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.