Pages

Thursday, September 13, 2012

புத்தகங்கள் பெறுவதில் ஆர்வம் காட்டாத பள்ளிகள்

சமச்சீர் கல்வி முறையில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை பெறுவதில், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டு முதல் முப்பருவ பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையில், மூன்று பிரிவுகளாக பாடப்புத்தகம் பிரிக்கப்பட்டது.


"இன்டன்ட்" இதன்படி, முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்று அல்லது இரண்டு புத்தகத்திலேயே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, அனைத்து பாடங்களும் அச்சிடப்பட்டு இருந்தன. இம்மாதம், 30ம் தேதியுடன் முதல் பருவத்துக்கான காலம் முடிவடைவதால், அதற்கான தேர்வுகளும் நடந்து வருகின்றன.

தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 1ம் தேதியிலிருந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடம் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் புத்தகங்கள் எண்ணிக்கை குறித்த, "இன்டன்ட்" பெறப்பட்டு, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பெரும்பாலானவை, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் தேவை குறித்து, எதுவும் தெரிவிக்காமல் அலட்சியமாக உள்ளன. இதனால், அப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அலட்சியம்: இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: மண்டல பாட நூல் கழக குடோன் மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியும், தன் தேவைப்பட்டியலை வழங்கும் போது, அதற்கேற்ப முன் கூட்டியே தயார் செய்து, சரியான நேரத்துக்குள் பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும்.

பெரும்பாலான மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்கள் குறித்து எவ்வித தகவலும் தராமல், அலட்சியப்போக்குடன் உள்ளனர். அக்டோபர் மாதத்தில், ஒரே சமயத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வரும்போது, ஒரு சில பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அவற்றை தருவித்து தர, ஒரு சில நாள் தாமதமாகலாம்.

இதனால், அப்பள்ளிகளுக்கு அலைச்சலும், மாணவர்களுக்கு தாமதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்கூட்டியே புத்தகங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. தவறு. மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. இந்த வலைத்தளத்தில் மூலமாகத்தான் எங்கள் பள்ளிக்கும் எங்கள் பள்ளியின் நட்பு பள்ளிகளுக்கும் பல விசயங்கள் தெரிய வருகின்றன.
    கடைசி நேரத்தில் ஒரு நாள் முன்னதாக மாலை 5 மணிக்கு மேல் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். உடனடியாக அடுத்த நாள் காலையே முதல்வர் கூட்டம் உள்ளது அல்லது அனைத்து வகுப்புகளுக்கும் பருவ பாடபுத்தகங்களுக்கு ரொக்கத்தை கொடு என்கிறார்கள். மாற்றாந்தாய் மனோபாவத்தை கல்வித்துறை அதிகாரிகள் கடைபிடிப்பதாலேயே இவ்வாறு நேர்கின்றன.
    மூன்று மாதங்களுக்கு மேல் 30 தடவைக்கு மேல் நேரில் சென்று கெஞ்சியபிறகே இந்தாண்டு மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள் கிடைத்தன. இன்னும் அக்கவுண்டன்சி புத்தகம் கிடைக்கவே இல்லை. ஆனால் மே மாதமே அதற்கும் சேர்த்து டிடி எடுத்து கொடுத்து விட்டோம்.
    எங்கே சென்று புலம்புவது?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.