Pages

Saturday, September 22, 2012

புதிதாக பி.எட். படித்தவர்களும் டி.இ.டி மறுதேர்வு எழுத அனுமதி

"தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் மறுதேர்வில்(டி.இ.டி.,), புதிதாக பி.எட்., படித்தவர்களும் தேர்வு எழுதலாம் என்று, அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளையைச் சேர்ந்த யாமினி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர், தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.

கடந்த ஜூலை மாதத்துக்கு பின், என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்., படித்து காத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்., படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகி, சில வாதங்களை முன் வைத்தார்.இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்., முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வை, அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாக, அமைச்சர் தலைமையில், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி, பரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்னையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் "ஹால் டிக்கெட்&'டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.