நடப்பு கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை, இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமுதாயங்களைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001 - 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கடந்த 2011-12ம் கல்வியாண்டில் ரூ.179 கோடியே 21 லட்சம் செலவில் 2,77,788 மாணவர்களுக்கும் 3,44,380 மாணவியர்களுக்கும் என மொத்தம் 6,22,168 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அதேபோன்று, நடப்பு கல்வியாண்டில் ரூ.196 கோடியே 10 லட்சம் செலவில் 2,81,861 மாணவர்களுக்கும் 3,49,418 மாணவியர்களுக்கும் என மொத்தம் 6,31,279 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, இந்தக் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கித் தொடங்கி வைத்தார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
மேலும் இந்தத் திட்டங்களில் மாநில அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டமும் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் என்ற வீதத்திலும், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.25ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம் என்ற வீதத்திலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்னையினர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்குத் தனியாகவும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்வின் போது, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Thank you for your service for tamilnadu education department and also teachers of tamilnadu
ReplyDelete