Pages

Friday, September 7, 2012

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பற்றிய கட்டுரை (எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்) - திரு. உதயை மு. வீரையன் அவர்களின் கட்டுரை!

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - பள்ளிச் சேர்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு, பெற்றோர் மற்றும் குழந்தைகள் நேர்காணல், வயதுச் சான்றிதழ், நன்கொடை ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த கற்காலத்திலிருந்து அவர்களது வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது. அவர்கள் கிடைத்ததைத் தின்று வயிறு வளர்த்தனர்; தங்கள் கருத்துகளைச் சைகைகள் மூலம் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் உணவுகளைப் பக்குவப்படுத்தி உண்பதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கு ஒலிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கும் தெரிந்து கொண்டனர்.


அவர்கள் பேசத்தொடங்கிய காலமே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். ஒலிக்குறிப்புகள் மொழியாக மாறிய காலமே நாகரிக வளர்ச்சியாகும். பேச்சு மொழிக்கு எழுத்து வடிவம் உருவான காலமே "நாகரிகத்தின் உச்சம்' என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பிறந்த குழந்தை அப்படியே விடப்பட்டால் அது ஓர் அரக்கனாகவே மாறிவிடும். அந்தக் குழந்தையை மனிதனாக மாற்றுவது கல்வியாகும். கல்வியின் கருவியே எண்ணும் எழுத்தும். மனித குலம் இந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தால் வியப்பே ஏற்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மக்கள்தொகையில் 81.7 விழுக்காடு எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவே இருந்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் இப்போது உயிருடன் இல்லை. நாடு விடுதலைபெற்ற பிறகு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளும், திட்டங்களும் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை என்பதை ஆட்சியாளர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்ப எழுத்தறிவற்றவர் தொகையும் கூடிக்கொண்டே போனது.

இதை அரசியல் சாசன வல்லுநர்கள் அறியாமல் இல்லை. "6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்பது அடிப்படை உரிமை' என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றமும் 1993-ல் "உன்னிகிருஷ்ணன் -எதிர் - ஆந்திர அரசு' வழக்கில் இதை உறுதி செய்துள்ளது.

இதன் பிறகு பல போராட்டங்கள் நடந்தன.

2005-ல் 86-வது அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரசு நிர்ணயித்தவண்ணம் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்றும், இது அடிப்படை உரிமை என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசாங்கம் அப்போதும் அந்தச் சட்டத்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர மேலும் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இலவசக் கட்டாயக் கல்விக்கான உரிமைச்சட்டம், 2009-ல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

இச் சட்டத்தைச் செயல்படுத்திடத் தேவையான விதிகள் இயற்றும் பொறுப்பை மாநிலங்களுக்கு ஒப்படைத்துவிட்டு, மத்திய அரசு "மாதிரி விதிகளை' மட்டும் வெளியிட்டது.

இந்தச் சட்டம் 1-4-2010 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. நமது மாநிலத்தில் முந்தைய அரசு நகல் விதிகளை வெளியிட்டு மக்களின் கருத்தைக் கோரியது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால், புதிய அரசு 8-11-2011 அன்று விதிகளை வெளியிட்டுள்ளது.

ஏழ்மையும், வறுமையும், அறியாமையும் நிறைந்த நம் நாட்டு மக்கள் எழுத்தறிவு பெறுவதற்கு இப்படிப்பட்ட சட்டம் தேவை என்று போராடியவர்களுக்கு மனநிறைவு இல்லையென்றாலும் வரவேற்கவே செய்கின்றனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை அடையலாம் என நம்புகின்றனர்.

அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார்மயம் என்னும் கொள்கைகளின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதில் "இலவசம்' என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும், கட்டணப் பள்ளிகளுக்கும் இடமளிப்பதால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைத்திட வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்தச் சட்டத்தில் வரவேற்கத்தக்க சிறப்புகளும் இல்லாமல் இல்லை. பள்ளிச் சேர்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு, பெற்றோர் மற்றும் குழந்தைகள் நேர்காணல், வயதுச் சான்றிதழ், நன்கொடை ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் பள்ளிக்கருகில் வசிக்கும் எளியவர் வீட்டுக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பெற்றோரை பெரும்பான்மையாகக் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். இவை ஆறுதலான அம்சங்கள். இருப்பினும், இவற்றை நடைமுறைப்படுத்திட ஏராளமான தடைகள் இருக்கின்றன. 25 விழுக்காடு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்துத் தரமான கல்வி பெறுவர் என்றால் மீதம் 75 விழுக்காடு மாணவர்களுக்கு அக்கல்வி மறுக்கப்படுகிறது என்பதுதானே பொருள். அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இருக்கும் இடைவெளியைக் குறைக்காமல் அல்லது குறைக்க முயற்சி செய்யாமல் வெறும் சட்டமும், விதிகளும் என்ன செய்துவிடும்?

நாடு விடுதலைபெற்று 65 ஆண்டுகளாகிவிட்டது. ஏழை மக்கள் எழுத்தறிவு பெறுவதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் முழு ஈடுபாட்டோடு செயல்படவில்லை. மக்கள் நலம் நாடும் அரசுகள் இதை எப்போதோ செயல்படுத்தி இருக்க வேண்டாமா?

இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தாங்கள் எவ்வளவு துன்பப்பட்டாலும், தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைத் தந்துவிட வேண்டும் என்ற பதைப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு என்ன காரணம்? தாம் படுகிற துன்பத்தைத் தம் பிள்ளைகள் படக்கூடாது என்பதுதான்; அத்துடன் தாம் துன்பப்படுவதற்குக் காரணம் படிக்காததுதான் என்று காலங்கடந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பிறக்கும்போது அனைவரும் சமமாகவே பிறந்து இருந்தாலும், வாழும் காலத்தில் அவர்களை உயர்த்தி நிறுத்துவது கல்விதான். இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் இதுதான் சமுதாய நிலை.

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பலருள்ளும், மூத்தவனை வருக என வரவேற்காமல், கல்வியறிவு மிக்கவனையே உலகம் வரவேற்கும் என்று சங்க இலக்கியமாகிய புறநானூறும் பாடுகிறது. "கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு' என்று பிற்கால இலக்கியங்களும் பேசுகின்றன.

உலகம் தோன்றிய காலத்திலிருந்தே அறிவுக்கும், அறியாமைக்கும் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முடிவில்லாத போரில் அறியாமை தோல்வியடைந்துகொண்டே இருக்கிறது. அறிவு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது.

வெளிச்சம் வரவர இருட்டு ஓடி ஒளிவதைப்போல, அறிவு வளர வளர அறியாமை அழிந்துகொண்டே இருக்கிறது. இந்தப் போராட்டம் தொடரும்.

""2020-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவல்ல, இது இந்தியர் மனதில் இருக்க வேண்டியதோர் பணி இலக்கு. இதை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவோம். வெற்றி காண்போம்...'' என்று கூறினார் முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் அறிஞருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

வளர்ந்த இந்தியா உருவாக வேண்டும் என்பதும், வல்லரசாக மாற வேண்டும் என்பதும் கனவாக மட்டும் இருந்துவிடக் கூடாது. நனவாக வேண்டும். இதற்குப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் மட்டும் போதாது. நாட்டு மக்கள் அனைவரும் எழுத்தறிவு பெறுவதுதான் உண்மையான வளர்ச்சியாகும்.

இதைத்தான் கல்வியாளர் கோத்தாரி, "தேசத்தின் எதிர்காலம் அதன் வகுப்பறைக்குள் தீர்மானிக்கப்படுகிறது' என்று கூறினார். மத்திய, மாநில அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"கல்வியா? செல்வமா?' என்று பட்டிமன்றம் நடத்திய காலம் மாறிவிட்டது. கல்வி வணிகமயமாக மாறிவிட்ட நிலையில் கல்வியைப் பெறவும் செல்வமே தேவை என்ற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்ட நிலையில், தொடக்கக் கல்வியை அனைவருக்கும் அளிக்க வேண்டியது அரசுகளின் கடமையாகிவிட்டது.

இப்போது நாட்டிலுள்ள மொத்த பள்ளிகளில் 90 விழுக்காடு அரசுப் பள்ளிகளே! 10 விழுக்காடுகளே தனியார் பள்ளிகள்.

90 விழுக்காடு மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசு, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் நலிந்தவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கெஞ்சுவது ஏன்?

அரசுப் பள்ளிகளை ஆய்வுசெய்து, அதன் தேவைகளை நிறைவுசெய்ய அரசு முன்வர வேண்டும்.

""மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழல் அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும்.

பலபேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்துபோகும். கல்வியற்ற மனிதனும் அழிபட்டுத்தான் போவான்...'' என்றார் குழந்தைகளின் கல்வியைப் பற்றி முதன்முதலில் ஆராய்ந்த சிந்தனையாளர் ரூசோ.

வாழப் பிறந்த மனிதனை வாடாமல் காப்பது கல்வியாகும்; எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.