Pages

Saturday, September 29, 2012

அண்ணாமலை பல்கலையில் தமிழ் இணைய மாநாடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு, டிசம்பர் 28ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), மொழியியல் உயராய்வு மையம் ஆகியன நடத்துகின்றன.
இதுகுறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராமநாதன், உத்தமம் நிறுவனத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கூறியதாவது: தமிழ் மொழியை, கணினித் தமிழுக்கு ஏற்றாற்போல், உருவாக்குவது குறித்து, கருத்தரங்குகளும், ஆய்வு அரங்கங்களும் மாநாட்டில் இடம் பெறுகின்றன.

அலைபேசி மற்றும் பலகை கணினிகளில், ஐ.ஓ.எஸ்., அன்ட்ராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், எழுதுதல்; மின் புத்தகங்கள், இதழ்களை கையகக் கருவிகளில் கொண்டு வருதல்; தமிழ் மென்பொருள்களை தன்மொழியாக்கல், இயன்மொழி பகுப்பாய்வு, பிழை திருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல் போன்ற தலைப்புகளில் ஆய்வரங்கம் நடக்கிறது.

மேலும், தேடுபொறிகள், இயந்திர மொழி மாற்றம்; தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை; கணினி வழி தமிழ் படித்தல், கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், நடக்கும் ஆய்வரங்களுக்கு, மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இருந்து, ஆய்வுக் கட்டுரைகளும் பெறப்படுகின்றன.

அக்டோபர் 20ம் தேதிக்குள், ஆய்வு சுருக்கங்களை, அண்ணாமலை பல்கலையின் மொழியியல் உயராய்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும். மாநாட்டில், கணினித் தமிழ் சங்கத்தின் சார்பில், கண்காட்சி நடைபெறும். கண்காட்சி அரங்குகளில், தமிழ் மென்பொருள்கள் மற்றும் கணினித் தமிழ் தொடர்பான விவரங்கள் இடம் பெறும்.

இணைய மாநாடு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், கணினித் தமிழ் ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.