Pages

Wednesday, September 12, 2012

ஒரே நடைமுறை - துவங்கியது காலாண்டு தேர்வு


கடந்த ஆண்டு வரை, மாவட்ட அளவில் நடந்து வந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. தேர்வுத்துறை தயாரித்து வழங்கியுள்ள கேள்வித்தாள் அடிப்படையில், இன்று முதல், காலாண்டுத் தேர்வுகள் துவங்குகின்றன.


வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் கேள்வித்தாளுக்கும், பொதுத்தேர்வில், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் திணறுவதும், அரசின் கவனத்திற்கு வந்தது. அத்துடன், தேர்வை நடத்தும் முறைகளிலும், தேர்வு அறைகளில் மாணவ, மாணவியர் கடைப்பிடிக்கும் முறைகளிலும், ஒரே சீரான நடைமுறை இல்லாததால், பொதுத்தேர்வில், மாணவர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வையும், பொதுத்தேர்வைப் போல், தேர்வுத்துறை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும், பாட வாரியாக கேள்வித்தாளை தயாரித்து, அதை, "சிடி"யில் பதிவு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம், தேர்வுத்துறை ஒப்படைத்தது. அவர்கள், "பிரின்ட்" எடுத்து, பள்ளிகளுக்கு வினியோகம் செய்தனர்.

இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது: பொதுத் தேர்வைப் போலவே, கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும், 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதன்பின், காலை, 10:15க்கு, தேர்வு துவங்கும். 10ம் வகுப்பு தேர்வு, 12:45க்கும், பிளஸ் 2 தேர்வு, 1:15க்கும் முடிவடையும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர்கள், தேர்வுப் பணியை பார்வையிடுவர். இவ்வாறு, வசுந்தரா தேவி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.