Pages

Sunday, September 9, 2012

உள்ளூர் பள்ளிகளை உயரச் செய்வோம்! வி.குமாரமுருகன் அவர்களின் கட்டுரை

ஓன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் அவர்களுடைய வசிப்பிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள்ளும் அமைந்திருக்க வேண்டும் என புதிய கல்வி உறுதிச்சட்டம் கூறுகிறது. இப்படி பள்ளிகள் வீட்டுப் பக்கத்தில் இருந்தாலும் கூட அவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை என்னவோ இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாத நிலையில்தான் உள்ளது.


கிராமப்புறங்களில் நான்கைந்து (இதில் சில அரசுப் பள்ளிகள், சில அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்) பள்ளிகள் இருக்கும் நிலையிலும் கூட, வெளியூரிலுள்ள (நகரப் பகுதிகள்) பள்ளிகளுக்குத்தான் மவுசு அதிகரித்து வருகிறது. தனது பிள்ளை வெளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறான் என்று சொல்வதைத்தான் பெற்றோர்கள் பலரும் விரும்புகின்றனர்.

இப்படி ஒரு மாய உலகில் சஞ்சரிக்கும் பெற்றோர்களை தங்கள் வசம் இழுத்து தங்கள் பள்ளியில் சேர்ப்பதற்காக வேன், கார், ஆட்டோ என வாகனங்களை அனுப்பிவருகின்றன நகரப் பகுதி பள்ளி நிர்வாகங்கள்.

இதையும் தாண்டி தங்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைத்தால் சலுகைகள் பலவற்றை வழங்குவதாகவும் நகர்ப்பகுதி பள்ளிகளின் நிர்வாகங்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி வெளியூர் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்களும் அதிகரித்து வருகின்றனர்.

இதன் காரணமாக கிராமப் பகுதிகளில் உள்ள ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் போன்றவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

தங்கள் கிராமத்திலும் அரசு நடுநிலைப் பள்ளி வர வேண்டும். உயர்நிலைப் பள்ளி வர வேண்டும் என்று ஆர்வத்துடன், அரசியல்வாதிகள் மூலம் பள்ளிகளைக் கொண்டுவரும் உள்ளூர் பொதுமக்கள் பள்ளி கொண்டுவரப்பட்ட நிலையிலும் தங்கள் குழந்தைகளை வெளியூரிலுள்ள பள்ளிகளுக்கு அனுப்புவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஏராளமான பிள்ளைகள் வேன்கள், பஸ்கள், ஆம்னி வேன்கள் மூலம் வெளியூர் பள்ளிகளுக்கு படையெடுக்கின்றனர்.

இப்படி வெளியூர் மோகத்தால் உள்ளூர் பள்ளிகள் செயலற்று வருகின்றன; தங்கள் குழந்தைகள் கூட்ட நெரிசலில்தான் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்பதைப் பார்த்தபிறகும் அதன் தீவிரத்தைப் பெற்றோர் உணர்வதில்லை.

சென்னையில் தனியார் பள்ளி பஸ்ஸின் வாகனத்திலிருந்த ஓட்டை வழியாக மாணவி ஒருவர் கீழே விழுந்து இறந்த சம்பவத்தையடுத்து பெரிதும் கவலையடைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ஏன் வாகனம் மூலம் வெளியூர் (நகரப்பகுதி) சென்று படிக்க வேண்டும், உள்ளூரிலுள்ள பள்ளியிலேயே சேர்த்து விடுவோமே என்று எண்ணி இன்று வரை சேர்க்காததுதான் வியப்பு.

பெற்றோர்கள் தங்களுடைய நகர மோகத்தை மறந்து உள்ளூர் பள்ளிக்கு முக்கியத்துவம் தந்தால் அப்பள்ளியும் முதல் தரத்தை எட்டும். வாகன விபத்துகளும் குறையும். உள்ளூர் பள்ளிகளின் உயர்வுக்குப் பாடுபடுவோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.