Pages

Tuesday, September 4, 2012

பள்ளி வாகன பாதுகாப்புக்கு புதிய வரைவு விதிகள் - உயர்நீதிமன்றம் முழு திருப்தி

பள்ளி வாகனங்களில், குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதிசெய்ய, புதிய வரைவு விதிகளை, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த விதிமுறைகளை, ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது.


சென்னை சேலையூரில், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பலியான சம்பவம் குறித்த வழக்கை, தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" தானாக முன் வந்து விசாரித்தது.

வரைவு விதிகள்

"பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்த, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்; வரைவு விதிகளை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட், 30ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த முக்கியமான பிரச்னைக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்வதாக, அரசு சார்பில் உத்தரவாதம் அளித்தும், அதை நிறைவேற்றாமல், இதுவரை அதை தாக்கல் செய்யாமல், மேலும் கால அவகாசம் கேட்பது துரதிருஷ்டம்; செப்., 3ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

அன்று, வரைவு விதிகளை அரசு கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து, இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன், செப்., 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ஆகஸ்ட், 31ம் தேதியிட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, "ஐகோர்ட் தலையிட்டதால்தான், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. எனவே, கோர்ட்டை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்" என்றார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "பள்ளி குழந்தைகளின் நலனை, இந்த கோர்ட் எப்போதுமே கருத்தில் கொள்ளும்" என்றார்.

முழு திருப்தி

அதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில், வரைவு விதிகளை அரசு தாக்கல் செய்துள்ளது. அதை, விதிகளாக அரசு அறிவிக்கை செய்ய வேண்டும். வரைவு அறிக்கையை படித்துப் பார்த்தோம். முழு திருப்தி அடைந்தோம். இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்தினால், பள்ளி வாகனங் கள் தொடர்பான விபத்துகள் பெருமளவு குறையும். இந்த பள்ளி சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.