Pages

Tuesday, September 25, 2012

பள்ளிப் பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்கத் திட்டம்

பள்ளி மாணவ- மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓட்டுனர்கள் மட்டுமின்றி, பள்ளி பேருந்தின் உதவியாளர்களுக்கும், லைசென்ஸ் கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து, பள்ளி பஸ்களின் பாதுகாப்பு, உறுதித்தன்மை குறித்து, இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி பஸ்களும், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பள்ளி வாகனங்களின் டிரைவர்களை பரிசோதிக்கும் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள், உதவியாளர்களை கண்டுகொள்வதில்லை. உதவியாளர்களுக்கும், போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துக் கூற வேண்டும் என, பல தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து, பள்ளி வாகன உதவியாளர்களும், "லைசென்ஸ்&' பெற வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., வெங்கிடரமணி கூறியதாவது:

பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி வாகன நடத்துனர், உதவியாளர்களுக்கும், லைசென்ஸ் வழங்குவது குறித்து, மோட்டார் வாகன விதிகளின்படி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை, அரசுக்கு வைக்கப்பட்டு, உயரதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் இருந்து, இதை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடத்துனர் அல்லது உதவியாளரின் வயது தகுதியாக, 18 முதல், 50 நிர்ணயிக்கப்படும்.

லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலுதவி குறித்து முழு பயிற்சி பெற்று, அரசு அங்கீகரித்த நிறுவனங்களிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே உதவியாளர், லைசென்ஸ் பெற தகுதி உடையவராக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.