Pages

Monday, August 6, 2012

பள்ளிக் கல்வித் துறை செயலரை சந்திக்க ஆசிரியர்கள் முடிவு

கல்வி உதவித்தொகை கையாடல் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்காக அளிக்கப்படும் கல்வி உதவித் தொகையை பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெயரிலும் பெற்று கையாடல் செய்ததாக நாமக்கல் மாவட்டத்தில் 77 தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க, மாவட்டக் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் மூலம் முக்கியத் தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் விரைவில் பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநரை நேரில் சந்தித்து தலைமையாசிரியர்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
கல்வி உதவித்தொகையை அனைத்து மாணவர்களின் பெயர்களிலும் பெறுவதற்கான பட்டியல் தயாரித்து அளிக்கும்படி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலிருந்து அனுப்பப் பட்ட இடைத்தரகர்கள் வற்புறுத்தியதுடன், அவ்வாறு பட்டியல் தயாரிக்காவிடில் பெற்றோர்களிடம் தெரிவித்து வேறு பள்ளிக்கு மாணவர்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மிரட்டியுள்ளனர்.
மேலும், தங்கள் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுத் தர வேண்டும் என்று சில பெற்றோர்களை தூண்டியும் விட்டுள்ளனர். அத்தகைய வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாகவே தலைமையாசிரியர்கள் அனைத்து மாணவர்கள் பெயரிலும் பட்டியல் தயாரித்து அனுப்பி கல்வி உதவித்தொகை பெற்றுத் தந்துள்ளனர்.
இதில், இடைத்தரகர்கள் மூலம் ஒவ்வொரு மாணவர்களின் கல்வி உதவித் தொகையில் ரூ.600 முதல் ரூ.900 வரை மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலக ஊழியர்களே பெற்றுள்ளனர். தலைமையாசிரியர்கள் எவ்வித தொகையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் முத்துச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
இத்தகைய தகவல்களை பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநரிடம் தெரிவித்து தலைமையாசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த மோசடிக்கு முழு முதல் காரணமாக செயல்பட்டுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தினர் மீதும், இடைத்தரகர்கள் மீதும் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2 comments:

  1. நடுநிலைப் பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி காண் பருவம் முடித்தலுக்கான அரசாணை இருந்தால் தெரியப்படுத்தவும்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.