மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 300 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி ஜோதிமணி வழங்கினார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதி தமிழக அரசு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதால் 1 மற்றும் 2 அணுஉலைகளில் மின் உற்பத்தி பணிகளை தொடங்கலாம் என தீர்ப்பி சுட்டிக் காட்டியுள்ளார்.
அனைத்து வழக்குகளும் தள்ளுபடி : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.
உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொறியாளர் சுந்தர்ராஜன், மீனவர்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் பீட்டர் ராயன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படாதவரை, கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அணு மின்நிலையத்தைத் தொடங்கலாம் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் நீரின் வெப்ப அளவு குறைக்கப்படும் என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருத்தி அமைக்கப்பட்ட அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுக்கு பரிந்துரை : தீர்ப்பை வழங்கிய நீதிபதி , மாநில அரசு கூடங்குளம் மக்களுக்காக சில நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய பல்நோக்கு மருத்துவமனை, சி.பி.எஸ்.சி., பள்ளிக்கூடங்கள் என பல்வேறு நலத்திட்டங்களை கூடங்குள மக்களுக்காக செயல்படுத்த வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.