Pages

Sunday, August 19, 2012

உயர்கல்வியில் மொழிப்பாடங்களுக்கும் இனி செய்முறைத் தேர்வு!


கல்லூரி மற்றும் பல்கலையில், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், 25 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மொழிப் பாடங்களில், மாணவ, மாணவியரின் தகவல் தொடர்பு திறமையை வளர்க்கும் நோக்கில், முதன்முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், அதிகமான மாணவ, மாணவியர் மொழிப்
பாடங்களாக, தமிழ், ஆங்கிலத்தை படிக்கின்றனர். மற்ற பாடங்களைப் போல், மொழிப் பாடங்களுக்கும், தலா, 100 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகின்றன. 100 மதிப்பெண்களுமே, எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே, செய்முறைத் தேர்வு அமலில் இருக்கிறது. இந்நிலையில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கு, செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என, சமீபத்தில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் உத்தரவிட்டார். அதன்படி, எழுத்துத் தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கு, 25 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கப்பட உள்ளது.

இது குறித்து அமைச்சர் கூறியதாவது: மாணவர்கள், மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறாமல், அவர்களின் தகவல்தொடர்பு திறன், பேச்சுத்திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், செய்முறைத் தேர்வு முறை வகுக்கப்படும்.

மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசும் திறன் மிகக் குறைவாக இருக்கிறது; ஆங்கிலத்தில் எழுதவும் தெரியவில்லை. எனவே, இலக்கண பிழையின்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுதல், பேசுதல், குழு விவாதம், கேள்வி-பதில் போன்றவற்றுக்கு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த முறையினால், மாணவரின் திறன் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறும்போது, "மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு முறை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, பல்கலையின் பாடத் திட்டங்களுக்கான குழுவின் முன்பாக வைத்து, அனுமதி பெறப்படும். அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டே, மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு திட்டம் அமலுக்கு வரும்,&'&' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.