Pages

Wednesday, August 15, 2012

குருப்- 2 தேர்வை ரத்து செய்வதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே, வெளியானது குறித்து, தர்மபுரி, ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தேர்வாணைய உறுப்பினர்களுடன் நேற்று காலை ஆலோசனை நடத்திய அதன் தலைவர் நடராஜ், குரூப்- 2 தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இத்தேர்வை வேறொரு தேதியில் நடத்துவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என்றும், அவர் தெரிவித்தார். கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், ஆசிரியர்கள் மூன்று பேர் உட்பட ஆறு பேர், கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 3,631 இடங்களை நிரப்ப, குரூப்- 2 நிலையில், நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த செந்தில் மனைவி தனக்கொடி, ஈரோடு சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுத வந்த போது, கையால் எழுதப்பட்ட கேள்வி, பதில் தாளை வைத்திருந்தார். அவற்றை, சில தேர்வர் பார்த்தனர். பின், தேர்வு அறைக்குள் சென்று, கேள்வித்தாளை பார்த்தவர்கள், தனக்கொடி வைத்திருந்த அதே கேள்விகளும், பதில்களும் வரிசையாக கேட்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
தேர்வு முடிந்ததும், மைய கண்காணிப்பாளரிடம் புகார் கூறியதுடன், தனக்கொடியை கண்டுபிடித்து, அவரின் கேள்வி-பதில் தாளை நகல் எடுத்து, போலீசில் புகார் தெரிவித்தனர். கேள்வி எண் 131ல் இருந்து, 170 வரையில், கேள்வி-பதில்கள், கையால் எழுதப்பட்டிருப்பதும், அவை அப்படியே கேள்வித்தாளில் இடம் பெற்றிருப்பதும் உறுதியானதும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டத்திலும், முன்கூட்டியே கேள்வித்தாள், வெளியானதாகவும் கூறப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவியேற்றபின், தேர்வாணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, தேர்வாணையத்தில் இருந்த ஓட்டைகளை அடைத்தார். முந்தைய ஆட்சி காலத்தில் சின்னாபின்னமான தேர்வாணையத்தின் மதிப்பை தூக்கி நிறுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
இவர் பதவியேற்றபின் நடந்த பல தேர்வுகள், பலத்த கண்காணிப்புடனும், பாதுகாப்புடனும் நடந்து வருகின்றன. ஆலோசனை:இவ்வளவையும் மீறி, குரூப்௨ தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியான, நடராஜ் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
சம்பவம் குறித்து, தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை உடனடியாக அனுப்பி வைக்குமாறு, நடராஜ் கேட்டுக்கொண்டார். அதன்படி, நேற்று காலை 11.30 மணிக்கு, கலெக்டர்களின் அறிக்கைகள் கிடைத்தன. இதையடுத்து, பகல் 1 மணிக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன், அவசர ஆலோசனை நடத்தினார்.
பின், நடராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்வாணையம், கடந்த 12ம் தேதி, குரூப்-2 தேர்வில் கேள்வித்தாள் முன்கூட்டியே, வெளியாகியிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தோம். தர்மபுரி மாவட்டத்திலும், இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி, இரு முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி, 12ம் தேதி நடந்த குரூப்௨ தேர்வு, ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.
ஈரோட்டில், கேள்வித்தாள் முன்கூட்டியே, வெளியான விவகாரத்தை, அங்குள்ள தேர்வர்களே, போலீஸ் மற்றும் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள், கண்ணியமானவர்கள்; அவர்களை பாராட்டுகிறேன். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.