பிற மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தமாக (தொகுப்பு) எஸ்.எம்.எஸ். அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பீதி அடையத் தேவையில்லை என கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அசாமில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, மும்பை, புணே உள்ளிட்ட சில நகரங்களில் வசிக்கும் வடமாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுபோல பெங்களுரிலும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற வதந்தி பரவியதால், சுமார் 6,000 வடமாநில மக்கள் புதன்கிழமை தங்கள் சொந்த ஊருக்கு ரயில் மூலம் புறப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, வடமாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும், வதந்தி பரவுவதைத் தடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
15 ஆயிரம் பேர் வெளியேறினர்
ஆனாலும், மைசூர், மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வடமாநிலத்தவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
கடந்த 2 நாள்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் வெளியேறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 9,718 டிக்கெட் விற்பனையாகி உள்ளதாகவும், 2 சிறப்பு ரயில்கள் குவாஹாட்டிக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் மங்களூர் ரயில்வே மண்டல அதிகாரி அனில் குமார் அகர்வால் தெரிவித்தார்.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அனுப்ப தடை
இந்நிலையில், இதுதொடர்பான வதந்தி மேற்கொண்டு பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அடுத்த 15 நாள்களுக்கு தொகுப்பு எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, ஒவ்வொருவரும் ஒரே தடவையில் 5 எம்.எம்.எஸ்.-க்கு மேல் அனுப்ப முடியாது.
இதுகுறித்து, வடகிழக்கு மாநில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினர். அப்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தருண் கோகோய் கருத்து
இந்த பிரச்னை குறித்து, அசாம் மாநில முதல்வர் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ""பிரதமரும் நானும், கர்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர்களுடன் தொடர்பு கொண்டு வடமாநில மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். எனவே, பிற மாநிலங்களில் உள்ளவர்கள் அங்கேயே தங்கி இருக்கலாம்'' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.