Pages

Tuesday, August 28, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 6.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினார்கள். ஆனால், அவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.


வெற்றி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேரம் போதாது என்று தேர்வு எழுதிய அத்தனை ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததால் அரசு இந்த சலுகையை அளித்து தேர்வு நேரத்தையும் 3 மணி நேரமாக உயர்த்தி இருக்கிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர் வேலை வழங்கப்படும்.

1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமனம்

இதற்கிடையே, இந்த தகுதித்தேர்வு மூலமாக 1,134 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வழக்கமாக ஆசிரியர் பயிற்றுனர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தனியாக போட்டித்தேர்வு நடத்தும். ஆசிரியர் பயிற்றுனர் பதவியும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானது என்பதால் அந்த காலி இடங்களையும் தகுதித்தேர்வு மூலமாகவே நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தற்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் கொண்டு ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்கள் நிரப்பப்படுமா? அல்லது அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ள மறு தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.