Pages

Sunday, August 26, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை!

ஜுலை 12ம் தேதி நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1%க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜுலை 12ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 2 தாள்களாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த 2 தாள்களையும் மொத்தமாக 6,76,773 பேர் எழுதினர்.


முதல் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை 2,88,588 பேர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 1,735 பேர். இரண்டாம் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை 3,88,185 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 713 பேர்.

அந்த வகையில் 2 தாள்களிலும் சேர்ந்து 2,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 தாள்களிலும் சேர்த்து தேர்ச்சி பெற்றவர்கள் 83 பேர் மட்டுமே.

இதனடிப்படையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1%ஐ கூட தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிகம் பகுப்பாய்வு அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளை எழுதுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, தேர்வர்கள் மத்தியில் பரவலாக எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சி விகிதம் இந்தளவிற்கு குறைவாக இருப்பதால், தற்போதைய காலியிடங்களுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்குக்கூட அழைக்க ஆளில்லாத நெருக்கடி நிலவுகிறது.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மறுதேர்வுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வில், 30 நிமிட நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான விபரங்களை அறிய www.trb.tn.nic.in என்ற இணையதளம் சென்று காண்க.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.