Pages

Sunday, July 22, 2012

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நாள்கள்கூட வகுப்புக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுத உரிமை கோர முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு.

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த பி. கீதா உள்ளிட்ட 9 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். போதுமான நாள்கள் வகுப்புக்கு வரவில்லை என்று கூறி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. எங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இந்த மனுக்கள் மீது கடந்த மே மாதம் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. எனினும் இந்த வழக்கின் முடிவு தெரியாமல் தேர்வு முடிவை வெளியிடக் கூடாது என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கினை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அப்போது, கல்லூரி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நாள்கள் (75 சதவீத நாள்கள்) கண்டிப்பாக வகுப்புக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டே மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால் இந்த மாணவர்கள் போதிய நாள்கள் வகுப்புக்கு வரவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை பரிசீலித்து, நியாயமான காரணமாக இருந்தால் மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்கும் அதிகாரம் கல்லூரி முதல்வருக்கு உள்ளது. எனினும் 9 சதவீத நாள்கள் மட்டுமே முதல்வரால் விதிவிலக்கு அளிக்க இயலும்.
ஆனால் முதல்வரின் இந்த விதிவிலக்கைப் பெறும் அளவுக்குக்கூட மனுதாரர்கள் வகுப்புக்கு வராததால் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்க இயலாது என்று அவர் வாதிட்டார். அவரது இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே. சந்துரு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.