Pages

Sunday, July 8, 2012

ஒரே நாள் இரு தேர்வு: ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் குழப்பம்

ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வு நடக்க உள்ளது. அதே நாளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ளதால் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.  
தமிழ்நாடு அரசு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், ஆசிரியர் பட்டயப் பயிற்சி வகுப்புகளை (D.TED) நடத்தி ஆசிரியர் பணிக்கான தகுதி பட்டத்தை வழங்கி வருகிறது. 2 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பின் முதலாம் ஆண்டில் சமூக அறிவியல் பாடம் இடம்பெற்றுள்ளது.  

வரும் 12-ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வு நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களும், இப்பாடத்தில் தேர்ச்சி பெறாமல் தற்போது 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். 
இதேநாளில் தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வும் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வை இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில் ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் 2-ம் ஆண்டு படிக்கும் (முதலாம் ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள்) மாணவர்கள் சமூக அறிவியில் தேர்வை எழுதுவதா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளனர்.  ÷இதுகுறித்து மாணவர்கள் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ரூ.500 செலுத்தி நுழைவுச் சீட்டும் பெற்று உள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆசிரியர் பணியிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்துக்கொண்டே, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சி நிறுவனங்களில் பல ஆயிரம் செலவு செய்து பயிற்சி பெற்று உள்ளோம்.  
இந்நிலையில் சமூக அறிவியல் தேர்வும், ஆசிரியர் தகுதித் தேர்வும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடக்க உள்ளதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பமான நிலையில் மன உளைச்சலில் உள்ளோம். எனவே சமூக அறிவியல் பாடத் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.  
பெற்றோர்கள்: தற்போது உள்ள சூழ்நிலையில் பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப கடன் வாங்கி படிக்கவைத்து வருகிறோம். தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிற்சி நிறுவனத்தில் சேர்த்தோம். இந்நிலையில் இரு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால் கால விரயம், பண விரயம் ஏற்பட்டுள்ள நிலையில் பிள்ளைகளின் ஒராண்டு காலம் வீணாகிறது என பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.  
ஆசிரியர்கள்: தற்போது உள்ள சூழ்நிலையில் இவ்விரு தேர்வுகளுமே முக்கியமானது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்கம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒரே நேரத்தில் இரு தேர்வுகளும் வந்துள்ளன.

1 comment:

  1. ஆசிரியர் தகுதி தேர்வு அவசியம் என்றால் ஆசிரியர் பயிற்சியில் தேர்வு எதற்கு ?

    ஆசிரியர் தகுதி தேர்வில் 90 % பேர் பெயில் ஆனா , அவர்கள் அனைவரும் ஆசிரியர்க்கு ஆன தகுதி இல்லை என்பது அரசு கூறும் தகவல் .

    மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் ஆசிரியர்க்கு ஆன தகுதி உள்ளது என்பது அரசு கூறும் தகவல் .

    இப்படி இருக்கும் சூழலில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி அமர்த்தி இத்தனை ஆண்டுக்குள் தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்று சொன்னால் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் உள்ள
    ( 10 ஆண்டுகள் ) மேலாக உள்ளவர் பயன் பெறுவார்கள் .
    முன்பு இருந்த கல்வி முறை மாற்றம் பெற்றதால் தான் ஆசிரியர் தகுதி தேர்வு
    என்று கூறும் அரசு , தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தேர்வு வைத்து தகுதி உள்ள ஆசிரியர்களை மட்டும் பணியில் மீண்டும் சேர்த்து இருக்கலாம் . அதை விட்டு அவர்களுக்கு மட்டும் பயிற்சி
    அளித்த உடன் தகுதி வந்து விட்டதா ???????
    அதே போன்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பணியில் சேர்க்கும் முன்பு பயிற்சி அளித்தால் அவர்களுக்கு ஆசிரியர்
    பணிக்காண தகுதி வராதா என்ன ????
    அதை விட்டு வினாத்தாளை கடினமாக கேட்டு அதற்க்கு உரிய நேரம் தராமல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 6 லட்சம் பேர்க்கு மேல் ஆசிரியர்க்கு ஆன தகுதி இல்லை என்பது நியாயமா ???????
    நன்றி

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.