Pages

Friday, July 6, 2012

விடைத்தாள் திருத்திய 700 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவு, நேற்று முன்தினம் இரவு வெளியானது. 2,000 பேர் விண்ணப்பித்ததில், 1,300 மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்கள் மாறின. மொத்த மாணவரில், 65 சதவீதம் பேருக்கு மதிப்பெண்கள் மாறியிருப்பது, தேர்வுத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில், 16 மதிப்பெண்கள் குறைந்தும், 73 மதிப்பெண்கள் அதிகரித்தும் உள்ளன. மதிப்பெண்கள் மாறிய விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பி, நேரில் விசாரணை நடத்த, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 700 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிகிறது.
இவர்களை, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அழைத்து, இயக்குனர் வசுந்தரா தேவி, விசாரணை நடத்துவார். பத்து மதிப்பெண்கள் வரை, மாறுதலுக்கு உள்ளான விடைத்தாளை திருத்திய ஆசிரியர் மீது, எவ்வித நடவடிக்கையும் இருக்காது.
இதற்கு அதிகமாக மதிப்பெண்கள், மாறிய விடைத்தாளை திருத்திய ஆசிரியர் மீது, கிடுக்கிப்பிடி விசாரணை இருக்கும். மிகவும் கவனக்குறைவாக விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் மீது, சம்பள உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதுகுறித்து, முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:விடைத்தாள் திருத்துவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு, முகாம் அலுவலரும் ஒரு ச்ச்காரணம். காலையில், 10 விடைத்தாள்; பிற்பகலில், 10 விடைத்தாள் கொடுத்தால் சரியாக இருக்கும். ஆனால், வேளைக்கு, 20 முதல், 25 விடைத்தாள் கொடுக்கின்றனர்; எப்படி திருத்த முடியும்?குறிப்பிட்ட தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க வேண்டும் என, முகாம் அலுவலர், ஆசிரியருக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
அவர் தரும் தொல்லைகள், தாங்க முடியாது.மேலும், முகாமில், போதிய அடிப்படை வசதிகள் இருக்காது. இந்த ஆண்டு, மின்தடை பிரச்னை அதிகமாக இருந்தது. நகரம் மற்றும் நகரம் சார்ந்த பகுதிகளில் மட்டுமே, மின்தடை இல்லாமல் பார்த்துக் கொண்டனர். கிராமம் சார்ந்த பகுதிகளில், "லைட்&' எரியக்கூட வழி இல்லை.
சென்னையில், மெட்ரிக் பள்ளிகள் அதிகம். மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், விடைத்தாள் திருத்தும் பணியில் அதிகளவில் பங்கேற்கின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து, தமிழ்வழி விடைத்தாள்கள் தான், அதிகளவில் சென்னைக்கு வரும். அதேபோல், ஆங்கில வழி விடைத்தாள்கள், தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் செல்லும்.
ஆங்கில வழி பாடம் நடத்தும் ஆசிரியர்கள், தமிழ் வழி விடைத்தாளையும்; தமிழ் வழி ஆசிரியர்கள், ஆங்கில வழி விடைத்தாளையும் திருத்தினால், மாணவருக்கு சரியான முறையில் மதிப்பெண் கிடைக்குமா? இதுபோன்ற குளறுபடிகள் தான், மதிப்பெண் மாறுபாட்டிற்கு காரணம். இதையெல்லாம், அதிகாரிகள் வெளிப்படையாக கூறுவதில்லை.
விசாரணையில், ஆசிரியருக்கு பெரிய அளவில் தண்டனை இருக்காது. எனினும், அவர்களை பலமுறை சென்னைக்கு அழைத்து, பல மணி நேரம் காக்க வைத்து, பெரும் மன உளைச்சலை கொடுப்பர். இதுவே பெரிய தண்டனையாக இருக்கும். விடைத்தாள் திருத்துவதில் உள்ள குளறுபடிகளை, முழுமையாக ஆய்வு செய்து, சம்பந்தபட்ட அனைவர் மீதும் உள்ள தவறுகளை சரி செய்தால் தான், இப்பிரச்னை தீரும். இவ்வாறு ஆசிரியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.