Pages

Tuesday, July 31, 2012

புதிய கல்விக் கட்டணம்: 380 தனியார் பள்ளிகளிடம் விசாரணை

கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கோரி மேல் முறையீடு செய்த, 380 தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தும் பணியை, கட்டண நிர்ணயக் குழு நேற்று துவக்கியது. நவம்பர் மாதத்திற்குள், அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் இரண்டாவது தலைவராக ரவிராஜ பாண்டியன் இருந்தபோது, மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்தார். இவர், பள்ளி நிர்வாகிகள் தரப்பு கருத்துகளை சரியாகக் கேட்காமல், கட்டணத்தைக் குறைவாக நிர்ணயித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, குழுவின் மூன்றாவது தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு நியமிக்கப்பட்டார். இவர், மேல் முறையீடு செய்யும் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து வருகிறார்.
இதற்கிடையே, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போதாது எனவும்; பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு, கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 380 பள்ளிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தன.
வழக்கில், மேல் முறையீடு செய்த, 380 தனியார் பள்ளிகளுக்கும், விரைவில் விசாரணை நடத்தி, டிசம்பருக்குள் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண நிர்ணயக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மே மாதம், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த பள்ளிகளிடம், புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்கான விசாரணையை, கட்டண நிர்ணயக் குழு நேற்று துவக்கியது. இதுகுறித்து, குழு வட்டாரங்கள் கூறும்போது, ""380 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும் பணியை துவக்கி உள்ளோம். 200 பள்ளிகளுக்கு, செப்டம்பர் இறுதிக்கு உள்ளாகவும்; மீதமுள்ள 180 பள்ளிகளுக்கு, அகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் விசாரணை நடத்தி, நவம்பர் இறுதிக்குள், புதிய கட்டண விவரங்களை, இணையதளத்தில் வெளியிடுவோம் என்றனர்.
குழுத் தலைவர் சிங்காரவேலு, ஒவ்வொரு பள்ளி நிர்வாகியிடமும், பொறுமையாகக் கருத்துக்களை கேட்கிறார்; பள்ளியின் வரவு - செலவு விவரங்கள் குறித்த மனுக்களை அளித்தாலும், பள்ளி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை கவனமாகக் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்.
எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், கட்டண நிர்ணயக் குழு, பொறுமையாகக் கருத்துக்களை கேட்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கும்; சரியான, புதிய கட்டணத்தைக் குழு நிர்ணயிக்கும் என, பள்ளி நிர்வாகிகள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.